சென்னை: தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின. இதில் திருப்பூர் மாவட்டம் உடுமலை ஸ்ரீனிவாசா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி திவ்யலட்சுமி 499 மதிப்பெண்கள் பெற்று (தமிழ் 99, ஆங்கிலம் 100, கணிதம் 100, அறிவியல் 100, சமூக அறிவியல் 100) மாநிலத்தில் முதலிடம் பிடித்துள்ளார். திவ்யலட்சுமியின் சொந்த ஊர் திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே சாமிநாதபுரம். தந்தை கார்த்திகேயன் பால் வியாபாரி. தாய் சாந்தாமணி. அக்காள் சுப்ரஜா கல்லூரி படிப்பை முடித்துள்ளார். மாணவி திவ்யலட்சுமி கூறுகையில், மாநிலத்தில் முதல் மாணவியாக தேர்ச்சி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. எல்கேஜியில் இருந்து இந்த பள்ளியில்தான் படிக்கிறேன். டியூஷனுக்கு செல்லவில்லை. அதிகாலை 4 மணிக்கு எழுந்து படிப்பேன். இரவு 10.30 மணி வரை படிப்பேன். ஆசிரியர்களின் வழிகாட்டுதலில் அவர்கள் கூறியபடி படித்தேன்.
படித்தவற்றை தொடர்ந்து எழுதிப் பார்த்தேன். பிளஸ் 1 வகுப்பில் பயோமேத்ஸ் குரூப் எடுத்து, டாக்டருக்கு படித்து சேவை செய்ய உள்ளேன் என்றார். தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூர் தனியார் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி மாணவி ரேஷ்மா, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 500க்கு 498 மதிப்பெண் பெற்று மாநில அளவில் இரண்டாமிடம் பிடித்துள்ளார். கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களில் நூற்றுக்கு நூறு பெற்றுள்ளார். ரேஷ்மாவின் அப்பா முத்துக்குமார் புதியம்புத்தூர் ஊராட்சியில் தூய்மை காவலராக பணிபுரிந்து வருகிறார். அவரது தாய் முத்து செல்வி டெய்லராக உள்ளார். மாணவி ரேஷ்மா கூறுகையில், ‘டாக்டர் ஆவது எனது கனவு’ என்றார்.
70 வயதில் தேர்ச்சி
கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அருகே கோவிலாம்பூண்டி கிராமத்தில் வசிப்பவர் கோதண்டராமன்(70). ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர். 2022ல் 8ம் வகுப்பு தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றார். கடந்த 2024 ஏப்ரலில் 10ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு எழுதி அறிவியலில் 41, சமூக அறிவியலில் 57 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றார். மற்ற 3 பாடங்களில் தேர்ச்சி பெறவில்லை. தொடர்ந்து ஜூலை மாதம் மீண்டும் தேர்வு எழுதி தமிழில் 69, கணக்கில் 72 மதிப்பெண்கள் பெற்றார். ஆங்கிலத்தில் தேர்ச்சி பெறவில்லை. சமீபத்தில் ஆங்கில பாட தேர்வு எழுதினார். நேற்று வெளியான தேர்வு முடிவில் ஆங்கிலத்தில் 60 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார்.
தற்ெகாலை செய்த மாணவி 348 மதிப்பெண்
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே பிலிக்கல்பாளையம் நல்லாக்கவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் கவிதா(40). கணவர் பிரகாசம் இறந்த நிலையில், அங்கன் வாடி மையத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர்களது ஒரே மகள் கீர்த்திவாசனி(15), 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி இருந்தார். பெயிலாகிவிடுவோமோ என்ற பயத்தில் நேற்று முன்தினம் மதியம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், மின் விசிறியில் துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் நேற்று காலை 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் மாணவி கீர்த்திவாசனி 500க்கு 348 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றிருந்தார். தமிழில் 70, ஆங்கிலம் 83, கணக்கு 81, அறிவியல் 70, சமூக அறிவியலில் 44 மதிப்பெண் பெற்றிருந்தார். இதை பார்த்த அவரது தாய் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.
The post 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் பால் வியாபாரி மகள் முதலிடம்; தூய்மை காவலர் மகள் 2ம் இடம்: டாக்டர் ஆவதே லட்சியம் என பேட்டி appeared first on Dinakaran.