சென்னை: மார்ச் மாதம் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ்2 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் தொடங்க உள்ளன. ஏப்ரல் மாதம் வரை நடக்கும் இந்த தேர்வுகளை கண்காணிக்க தேர்வு முறை சீர்திருத்த வல்லுநர் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் மேனிலை, இடைநிலை, மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன் மற்றும் ஆசிரியர் பட்டயக் கல்வி தேர்வுகளுக்கு பள்ளிக் கல்வி இயக்ககம், தொடக்க கல்வி இயக்ககம், பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வித்துறை, ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் ஆகிய துறைகளை சேர்ந்த இயக்குநர்கள், இணை இயக்குநர்களை தேர்வுப் பணிகளில் ஈடுபடுத்த தேர்வுத்துறை இயக்குநருக்கு, கடந்த 1999ம் ஆண்டுஅரசாணை எண் 28ன்படி அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அதன் தொடர்ச்சியாக 2025ம் ஆண்டு நடக்க உள்ள பொதுத்தேர்வுப் பணிகளை கண்காணிக்கும் வகையில் மாவட்ட வாரியாக இயக்குநர்கள், இணை இயக்குநர்களை நியமித்து அரசுத் தேர்வுகள் இயக்குநர் பட்டியல் தயாரித்து வெளியிட்டுள்ளார். அதன்படி, செங்கல்பட்டு மாவட்டம்-பள்ளிக்கல்வி இயக்குநர் கண்ணப்பன், காஞ்சிபுரம்-மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் உமா, சென்னை மாவட்டம்-தனியார் பள்ளிகள் இயக்குநர் பழனிசாமி, திருவள்ளூர் மாவட்டம்-தொடக்க கல்வி இயக்குநர் நரேஷ் ஆகியோர் கண்காணிப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். அதேபோல பிற மாவட்டங்களுக்கும் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், வரும் 7ம் தேதி முதல் மேற்கண்ட வகுப்புகளுக்கான செய்முறைத் தேர்வுகள் தொடங்க உள்ளது. தற்போது மீள் தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட உள்ளன.
The post 10, பிளஸ்2 பொதுத்தேர்வு கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம்: அரசாணை வெளியீடு appeared first on Dinakaran.