தமிழ்நாடு அரசு கொண்டுவந்த 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பரிந்துரை செய்தது சட்டவிரோதம் என அறிவித்துள்ள உச்ச நீதிமன்றம், அந்த மசோதாக்களுக்குத் தன்னுடைய சிறப்பு அதிகாரத்தின் கீழ் ஒப்புதல் அளித்து தீர்ப்பளித்திருக்கிறது. இந்தத் தீர்ப்பை, ‘வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு’ எனத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டிருக்கிறார். தமிழ்நாட்டுக்கு மட்டுமல்லாமல், பிற மாநிலங்களுக்கும் வழிகாட்டும் முன்னோடித் தீர்ப்பாக இது அமைந்திருக்கிறது.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகள் முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு முட்டுக்கட்டை போடும் வகையில் ஆளுநர்கள் நடந்துகொள்வதாக காங்கிரஸ் காலத்திலிருந்தே புகார்கள் உண்டு. தமிழ்நாடு, குஜராத், பஞ்சாப் போன்ற மாநில அரசுகள் வெவ்வேறு காலக்கட்டங்களில் ஆளுநர்களின் செயல்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றன; நீதிமன்றங்களையும் அணுகியிருக்கின்றன. பாஜக அல்லாத கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில், ஆளுநர்கள் மூலம் மாநில அரசுகளுக்கு அழுத்தம் கொடுக்கப்படுவதாக அண்மைக்காலமாக விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன.