சென்னை: “மாநிலத்தில் ஆட்சியதிகாரத்தில் இருப்பவர்களே தங்களின் நியாயமான உரிமைக்காகவும், மாநிலத்திலிருந்து வசூலிக்கப்பட்ட வரியிலிருந்து உரிய பங்கு கிடைப்பதற்காகவும் மத்திய பாஜக அரசிடம் ஒவ்வொரு நாளும் போராட்டம் நடத்த வேண்டியுள்ள நிலையில், 100 நாள் வேலைத் திட்டத்தில் பணியாற்றும் ஏழை, எளிய தொழிலாளர்களின் வாழ்வு, பாஜக ஆட்சியில் அவலமான நிலையில் உள்ளது” என்று முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக திமுக தொண்டர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தின் விவரம்: “இருமொழிக் கொள்கைக்கு எதிராக இந்தியைத் திணிக்க முயற்சிக்கும் மத்திய பாஜக அரசின் ஆதிக்கப் போக்கையும், மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் நாடாளுமன்றத் தொகுதிகள் மறுசீரமைப்பு என்ற பெயரில் தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தைக் குறைத்து, மாநில உரிமைகளைப் பறிக்கும் ஜனநாயக விரோதப் போக்கையும் கண்டித்து திமுக சார்பில் மார்ச் 12-ம் தேதி தமிழகம் முழுவதும் கண்டனப் பொதுக் கூட்டங்கள் நடைபெற்றன.