சென்னை: “மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்துக்கு கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட ரூ.86 ஆயிரம் கோடி நிதி தான் இந்த முறையும் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. இந்த நிதியைக் கொண்டு ஏழைக் குடும்பங்களுக்கு குறைந்தது 50 நாட்கள் கூட வேலை வழங்க முடியாது என்பதால் இந்த நிதி ஒதுக்கீட்டை ரூ.1 லட்சம் கோடியாக உயர்த்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:“இந்தியாவில் ஆண்டு வருமானம் ரூ.12 லட்சம் வரை ஈட்டுபவர்கள் வரி செலுத்தத் தேவையில்லை என்று நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. நிரந்தரக் கழிவு ரு.75 ஆயிரம் ஆக அதிகரிக்கப்பட்டிருப்பதால் ரூ.12.75 லட்சம் வரை வரி செலுத்தத் தேவையில்லை. இதனால் நடுத்தர வர்க்கத்தினரின் வரிச்சுமை பெருமளவில் குறையும். அந்த வகையில் இந்த அறிவிப்பு மகிழ்ச்சியளிக்கிறது.