துபாய்: நடப்பு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி. இறுதிப் போட்டியில் நியூஸிலாந்தை 4 விக்கெட்டுகளில் வீழ்த்தியது இந்தியா. கேப்டன் ரோஹித் சர்மா, ஸ்ரேயாஸ் ஐயர், அக்சர் படேல், கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்டியா ஆகியோர் சிறப்பாக பேட் செய்தனர். இந்திய அணியின் வெற்றி ரன்களை ஜடேஜா எடுத்துக் கொடுத்தார்.
துபாயில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் 252 ரன்கள் என்ற இலக்கை இந்தியா விரட்டியது. கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் துணை கேப்டன் ஷுப்மன் கில் இணைந்து இன்னிங்ஸை ஓபன் செய்தனர். முதல் 10 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 64 ரன்கள் எடுத்தது இந்தியா. ரோஹித் அதிரடியாக ஆடி அசத்தினார். நிதானமாக இன்னிங்ஸை அணுகினார் கில். 18 ஓவர்கள் வரை விக்கெட் இழப்பின்றி ஆட்டத்தில் இந்தியா ஆதிக்கம் செலுத்தியது.