* எங்கள் தரப்பில் இருந்தும் தாக்குதல் நடத்தப்படாது என ஈரான் அதிபர் உறுதி
வாஷிங்டன்: இஸ்ரேல், ஈரான் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, 12 நாளாக நடந்த யுத்தம் முடிவுக்கு வந்துள்ளது. பிரதமர் நெதன்யாகுவுடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசியதைத் தொடர்ந்து போரை நிறுத்திக் கொள்வதாக இஸ்ரேல் அறிவித்தது. இஸ்ரேல் தாக்குதல் நடத்தாமல் இருந்தால் பதிலடியை நாங்களும் நிறுத்துவோம் என ஈரான் அதிபர் மசூத் அறிவித்துள்ளார். இதனால் மத்திய கிழக்கில் சூழ்ந்திருந்த போர் மேகங்கள் விலகி உள்ளன.
ஈரான் அணுகுண்டு தயாரிக்க யுரேனியத்தை செறிவூட்டுவதில் இறுதிகட்டத்தை எட்டிவிட்டதாக கூறி அந்நாட்டின் மீது இஸ்ரேல் கடந்த 13ம் தேதி வான்வழி தாக்குதல் நடத்தியது. இதற்கு ஈரானும் ஏவுகணைகளை வீசி பதிலடி கொடுத்தது. இப்போரில் இஸ்ரேலுக்கு மறைமுகமாக உதவி வந்த அமெரிக்கா கடந்த 22ம் தேதி அதிகாலை ஈரானின் நடான்ஸ், போர்டோ, இஸ்பஹான் ஆகிய 3 அணுசக்தி மையங்கள் மீது பயங்கர குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. அமெரிக்காவின் தாக்குதலால் ஈரானின் அணுசக்தி மையங்கள் கடும் சேதம் அடைந்ததாக கூறப்படுகிறது.
இதற்கு அமெரிக்காவுக்கு கடுமையான பதிலடி தருவதாக ஈரான் எச்சரித்திருந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு கத்தார் மற்றும் ஈராக்கில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து ஏவுகணைகளை வீசியது. இவற்றை கத்தாரின் ஏவுகணை தடுப்பு அமைப்புகள் வானிலேயே இடைமறித்து தகர்த்தன. ஆனால் கர்தார் வான் பரப்பில் பறந்து வந்த ஈரான் ஏவுகணைகளால் உலக நாடுகளில் பீதி பரவியது.
இஸ்ரேலும் ஈரானும் சண்டையிட்ட நிலையில், அமெரிக்க ராணுவ தளத்தை குறிவைத்து, மூன்றாம் நாடுகளின் மீது ஈரான் ஏவுகணை வீசியதால் இப்போர் மத்திய கிழக்கில் மேலும் விரிவடையும் என அஞ்சப்பட்டது. இந்தநிலையில் திடீர் திருப்பமாக ஈரான்-இஸ்ரேல் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டு விட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் நேற்று அதிகாலையில் அறிவித்தார். இஸ்ரேலும், ஈரானும் ஒரே நேரத்தில் தன்னை தொடர்பு கொண்டதாகவும், இரு தரப்பும் அமைதியை விரும்பியதால் 12 நாட்களுக்கு பிறகு போர் நிறுத்தம் ஏற்பட்டு விட்டதாகவும் அதிபர் டிரம்ப் தனது சமூக ஊடகத்தில் பதிவிட்டார்.
இந்த அறிவிப்பை சவுதி அரேபியா, எகிப்து உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் வரவேற்றனர். இதனால், 12 நாட்களுக்கு பிறகு குண்டு சத்தங்கள் ஓயும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், டிரம்பின் அறிவிப்பு வெளியாகும் வரையிலும் ஈரானும், இஸ்ரேலும் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டிருந்தன. போர் நிறுத்தத்தை டிரம்ப் அறிவித்த பிறகும் கூட ஈரான் அதிகாரிகள் யாரும் உறுதிப்படுத்தவில்லை. ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி தனது எக்ஸ் பதிவில், ‘‘தற்போது எந்தவொரு போர் நிறுத்தம் அல்லது இராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவது குறித்து எந்த உடன்பாடும் இல்லை.
இருப்பினும், இஸ்ரேல், தெஹ்ரான் நேரப்படி அதிகாலை 4 மணிக்குள் தனது சட்டவிரோத தாக்குலை நிறுத்தினால், அதன் பிறகு எங்கள் பதிலடி நிறுத்தப்படும். எங்கள் ராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவது குறித்து இறுதி முடிவு பின்னர் எடுக்கப்படும்’’ என்றார். இதற்கிடையே, போர் நிறுத்த அறிவிப்புக்குப் பிறகு இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைகள் ஏவி தாக்கியதாக இஸ்ரேல் குற்றம்சாட்டியது. ஈரானின் ஏவுகணை டெல் அவிவின் பீர்ஷெபா பகுதியில் 3 அடுக்குமாடி கட்டிடங்களை தகர்த்ததாகவும், பொதுமக்கள் 4 பேர் பலியானதாகவும் இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் கூறினார்.
இதைத் தொடர்ந்து, ஈரானுக்கு வலுவான பதிலடி தர போரை தீவிரப்படுத்துமாறு தனது படைகளுக்கு அவர் உத்தரவிட்டார். இது போர் நிறுத்தத்தில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது. இஸ்ரேலின் இந்த அறிவிப்பால் அமெரிக்க அதிபர் டிரம்ப் கடும் அதிருப்தி அடைந்தார். ஹேக்கில் நேட்டோ உச்சிமாநாட்டிற்கு புறப்படுவதற்கு முன்பாக வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் டிரம்ப், ‘‘இரு நாடுகளும் போர் நிறுத்தத்தை மீறிவிட்டன. இஸ்ரேலும் மீறியிருக்கிறது. இது எனக்கு பிடிக்கவில்லை.
நீண்டகாலம் சண்டையிட்டு வருவதால் இஸ்ரேல் குழம்பிப் போய்விட்டது என நினைக்கிறேன். அவர்கள் குண்டு வீசக் கூடாது. இது போர் நிறுத்த விதிமீறல். அவர்களின் விமானங்கள் உடனடியாக நாடு திரும்ப வேண்டும்’’ என்றார். அதிபர் டிரம்ப் கண்டித்ததைத் தொடர்ந்து உடனடியாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, தொலைபேசி மூலம் டிரம்பிடம் பேசியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, போரிலிருந்து இஸ்ரேல் விலகிக் கொள்வதாக இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
அதே போல, இஸ்ரேல் தாக்குதல் நடத்தாத வரையிலும் பதில் தாக்குதல் நடத்த மாட்டோம் என ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியன் உறுதி அளித்தார். இதன் பின் முழுமையான போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது. இஸ்ரேல், ஈரான் தரப்பில் தாக்குதல்கள் நிறுத்தப்பட்டுள்ளன. உலகப் போராக வெடிக்கும் என அஞ்சப்பட்ட மோதல் 12 நாட்களுக்கு பிறகு ஓய்ந்துள்ளது உலக நாடுகள் மத்தியில் நிம்மதியை ஏற்படுத்தி உள்ளது.
* கச்சா எண்ணெய் விலை குறைந்தது
ஈரான்-இஸ்ரேல் போர் நிறுத்தத்தை தொடர்ந்து சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை நேற்று குறையத் தொடங்கியது. போரால் பிரண்ட் கச்சா எண்ணெய் விலை 4.5 சதவீதம் குறைந்து ஒரு பேரல் 68.26 அமெரிக்க டாலராக குறைந்தது. இது போர் தொடங்கிய கடந்த 12ம் தேதி இருந்த விலையை விட குறைவு. ஈரானின் கச்சா எண்ணெயை சீனா தொடர்ந்து வாங்கலாம் என அதிபர் டிரம்ப் கூறி உள்ளார்.
* 3,100 இந்தியர்கள் வெளியேறினர்
போர் தீவிரமடைந்ததை தொடர்ந்து ஈரான் மற்றும் இஸ்ரேலில் இருந்து இந்தியர்களை பத்திரமாக அழைத்து வர ஒன்றிய அரசு ஆபரேஷன் சிந்து நடவடிக்கையை மேற்கொண்டது. இந்த நடவடிக்கை மூலம் நேற்று வரை 3,170 பேர் இரு நாடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டிருப்பதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலில் இருந்து 161 பேர் கொண்ட முதல் குழு ஜோர்டான் அழைத்து வரப்பட்டு அங்கிருந்து தனி விமானத்தில் நேற்று டெல்லிக்கு அழைத்து வரப்பட்டனர். மேலும் எகிப்து வழியாக அழைத்து வரப்பட்ட மற்றொரு குழுவினர் 268 பேரும் நேற்று டெல்லி வந்தடைந்தனர். இதே போல ஈரானில் இருந்து 281 இந்தியர்கள் நேற்று டெல்லி வந்தடைந்தனர். இஸ்ரேலில் இருந்து வெளியேறிய பல இந்தியர்கள் ஜோர்டான், எகிப்து நாடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
* அணுசக்தி திட்டத்தை ஈரான் மீண்டும் தொடராது: டிரம்ப் கருத்தால் பரபரப்பு
அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது பேட்டியின் போது, ‘‘ஈரான் தனது அணுசக்தி மையங்களை மீண்டும் கட்டமைக்காது. அணுசக்தி திட்டத்தை இனி அது தொடராது. அந்த இடங்கள் மலைக்கு அடியில் உள்ளன. அவை தற்போது அழிக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவின் பி-2 விமானிகள் அனைவரும் நினைத்ததை விட சிறப்பாக செயல்பட்டு ஈரான் அணுசக்தி மையங்களை அழித்துள்ளனர்’’ என்றார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் ஈரானின் அணுசக்தி கழக தலைவர் முகமது இஸ்லாமி கூறுகையில், ‘‘ஈரான் அனைத்தையும் முன்கூட்டியே திட்டமிட்டுவிட்டது. எனவே எங்கள் அணுசக்தி திட்டத்தில் எந்த இடையூறும் ஏற்படாது’’ என கூறி உள்ளார்.
* இந்தியா வரவேற்பு
இந்திய வெளியுறவு அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘ஈரான், இஸ்ரேல் இடையிலான போர் நிறுத்தம் மற்றும் அதைக் கொண்டுவருவதில் அமெரிக்கா மற்றும் கத்தாரின் பங்களிப்பு குறித்த தகவல்களை வரவேற்கிறோம். எந்த மோதலையும் தீர்க்க பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திரத்திற்கு மாற்று இல்லை என்பதை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறோம். இந்த முயற்சிகளில் இந்தியா தனது பங்களிப்பை வழங்க தயாராக உள்ளது. இதில் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் நிலையான அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை நோக்கிச் செயல்படுவார்கள் என்று நம்புகிறோம்’ என கூறப்பட்டுள்ளது.
* அதிபர் இப்படியா பேசுவது?
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இஸ்ரேலும், ஈரானும் தாக்குதல் நடத்தியதால் பயங்கர கடுப்பான அதிபர் டிரம்ப், தனது ட்ரூத் சமூக ஊடகத்தில் இரு நாடுகளையும் கடுமையாக தாக்கினார். இதில் எல்லை மீறிய டிரம்ப் கெட்ட வார்த்தையையும் பயன்படுத்தினார். அமெரிக்க அதிபர் ஒருவர் பிற நாடுகளுக்கு எதிராக இப்படிப்பட்ட தகாத வார்த்தையால் திட்டுவதை இப்போதுதான் முதல் முறையாக பார்ப்பதாக பலரும் சமூக வலைதளங்களில் டிரம்பை விமர்சித்துள்ளனர்.
* ஈரான், இஸ்ரேல் இழந்தது என்ன?
* இஸ்ரேலின் 12 நாள் போரில் ஈரானில் 974 பேர் பலியாகி உள்ளனர். இதில் 387 பேர் பொதுமக்கள், 268 பேர் பாதுகாப்பு படையினர். 3,458 பேர் காயமடைந்துள்ளனர்.
* இஸ்ரேல் தரப்பில் 28 பேர் பலியாகி உள்ளனர். 1,000 பேர் காயமடைந்துள்ளனர்.
* ஈரானின் ஏவுகணையால் இஸ்ரேலில் பல குடியிருப்பு கட்டிடங்கள் தகர்ந்துள்ளன. பெரும்பாலான ஏவுகணைகளை இஸ்ரேலின் வான்பாதுகாப்பு அமைப்புகள் இடைமறித்து தாக்கியதால் பெரிய அளவில் இஸ்ரேல் சேதத்தை சந்திக்கவில்லை என கூறப்படுகிறது.
* ஈரான் இப்போரில் தனது முக்கியமான 14 அணு விஞ்ஞானிகளை இழந்துள்ளது. ராணுவ தளபதிகள் பலரையும் இஸ்ரேல் குறிவைத்து கொன்றுள்ளது. நேற்றும் துணை ராணுவ தளபதி ஒருவர் கொல்லப்பட்டதாக ஈரான் கூறி உள்ளது.
* அமெரிக்கா, இஸ்ரேல் நடத்திய தாக்குதலால் ஈரானின் நடான்ஸ், போர்டோ, இஸ்பஹான் அணுசக்தி மையங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன. இவற்றில் இருந்து செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை ஈரான் ரகசிய இடத்திற்கு மாற்றிவிட்டாலும், அணுசக்தி மையங்களை மீண்டும் சீரமைத்து அணு திட்டத்தை தொடங்க மேலும் சில காலங்கள் ஆக வாய்ப்புள்ளன. இது ஈரானுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.
* இந்த போரால் உலகின் பல நாடுகளின் எதிர்ப்பை இஸ்ரேல் சம்பாதித்துள்ளது.
* இப்போரை தூண்டியதன் மூலம் அமெரிக்கா புலி வாலை பிடித்த கதையாகி உள்ளது. கடந்த சில ஆண்டாக ஹிஸ்புல்லா, ஹவுதி உள்ளிட்ட ஈரான் ஆதரவு போராளிகள் அமைப்பு அமெரிக்காவை சீண்டாமல் இருந்தன. தற்போது ஈரானை தாக்கியதன் மூலம் இனி போராளிகள் அமைப்பு மூலம் அமெரிக்காவுக்கு ஈரான் குடைச்சல் கொடுக்க வாய்ப்புள்ளது.
The post 12 நாட்கள் தொடர்ந்த மோதல் முடிவுக்கு வந்தது இஸ்ரேல் – ஈரான் போர் நிறுத்தம்: பிரதமர் நெதன்யாகுவுடன் டிரம்ப் பேசியதை தொடர்ந்து தாக்குதலை நிறுத்துவதாக இஸ்ரேல் அறிவிப்பு appeared first on Dinakaran.