நெல்லை: நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் அளவுக்கு மீறி தாதுமணல் அள்ளிய விவகாரத்தை தொடர்ந்து 2013ம் ஆண்டு செப்.17ம் தேதி தாது மணல் அள்ள தடை விதித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. அதன் பிறகும் விவி மினரல்ஸ் நிறுவனம் தாது மணலை சட்ட விரோதமாக ஏற்றுமதி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக சென்னை ஐகோர்ட் விசாரணை நடத்தி வருகிறது.
இதில் தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்த மனுவில், ‘சட்ட விரோதமாக தாதுமணல் எடுப்பது தொடர்பான புகார்களின் அடிப்படையில், 2013ம் ஆண்டு முதல் அதற்கு தடை விதிக்கப்பட்டிருப்பதாகவும்’ தெரிவிக்கப்பட்டது.சட்ட விரோதமாக எடுக்கப்பட்ட தாது மணல் இழப்பை ஈடுகட்டும் வகையில் ரூ.5832 கோடியை தனியார் தாது மணல் ஏற்றுமதியாளர்களிடம் இருந்து வசூலிக்க முடிவு செய்யப்பட்டது.
ஐகோர்ட்டில் கடந்த டிசம்பர் மாதம் தாது மணல் விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதி மன்றத்தில் நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், நீதிபதி ஜோதிராமன் அமர்வில் விசாரணை நடந்தது. இதில் நெல்லை மாவட்ட நிர்வாகம், வி.வி மினரல், பீச் மினரல் கம்பெனி, டிரான்ஸ்வேர்ல்டு நிறுவனம் உள்ளிட்ட 6 நிறுவனங்கள் 60 நாட்களுக்குள் ரூ.3528 கோடி அபராதம் செலுத்த உத்தரவிடப்பட்டிருப்பதாக தெரிவித்தது.
இதில் வி.வி.மினரல்ஸ், பீச் மினரல்ஸ், இன்டஸ்ட்ரியல் மினரல்ஸ் ஆகிய நிறுவனங்கள் வைகுண்டராஜன் மற்றும் அவரது குடும்பத்தாருக்கு சொந்தமானவை. இதனை எதிர்த்து தாது மணல் ஆலை உரிமையாளர்கள், சென்னை ஐகோர்ட்டில் முறையிட்ட நிலையில் இது தொடர்பான விரிவான விசாரணையை நீதிமன்றம் நடத்தி வருகிறது.
இந்நிலையில் நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே கீரைக்காரன் தட்டு கிராமத்தில் உள்ள தாது மணல் ஆலைகளின் தலைமை அலுவலகமான விவி மினரல்ஸ், ஐஎம்சி, பிஎம்சி நிறுவனங்களின் தலைமை அலுவலகத்தில் நேற்று முன்தினம் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இதனைதொடர்ந்து விவி வைகுண்டராஜன், அவரது மனைவி, அவரது சகோதரர்கள் மற்றும் குடும்பத்தினர் உள்ளிட்டோர் மீது 9 பிரிவுகளுக்கு மேல் சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.
The post 12 இடங்களில் நடந்த சோதனையை தொடர்ந்து வைகுண்டராஜன், குடும்பத்தினர் மீது சிபிஐ வழக்கு appeared first on Dinakaran.