சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை வெளியிட்ட அறிக்கை: ஹின்டன்பர்க் அறிக்கையால் வீழ்ச்சியடைந்த அதானி குழுமம் மேலும் மேலும் சொத்துகளை குவிக்க ஒன்றிய பா.ஜ.க. அரசின் பல்வேறு துறைகளில் ஒப்பந்தங்களை பெறுவதற்கு மோடி அரசு வாய்ப்பளித்திருக்கிறது. ஒன்றிய அரசின் கீழ் இயங்கும் பல துறைகள் மேம்பாடு மற்றும் கடன்சுமை காரணங்களுக்காக தனியார் மயமாக்கப்பட்டு வருகிறது. இதற்காக ஒன்றிய அரசின் கீழ் இயங்கும் பல துறைகள் தனியார் வசம் ஒப்பந்த முறையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதில் ஆசியா கண்டத்திலேயே மிகப்பெரியதாக விளங்கும் இந்திய ரயில்வே துறையின் சில பகுதிகள் மேம்பாடு மற்றும் கடன் செலுத்துவதற்காக தனியார்வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதேபோல, விமான நிலையங்கள், துறைமுகங்கள் தனியார்வசம் ஒப்படைக்கப்பட்டு வருகிறது. தற்போது, முதன்முறையாக இந்திய தேசிய நெடுஞ்சாலைத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள தமிழ்நாட்டின் திருச்சி – துவரங்குறிச்சி – மதுரை நான்கு வழி தேசிய நெடுஞ்சாலை தனியார் வசம் ஒப்பந்த அடிப்படையில் மேம்பாடு மற்றும் அரசின் வருமான உயர்விற்காக வழங்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் அதானி சாலை போக்குவரத்து குழுமம் ரூ.1,692 கோடிக்கு இந்த ஒப்பந்தத்தை பெற்றுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது. 124 கி.மீ. தேசிய நெடுஞ்சாலை தனியார்மய திட்டத்தின் மூலம் அதானி குழுமத்திற்கு தாரை வார்க்கப்பட்டுள்ளது. இது ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதமாகும். தமிழகத்தில் அதானி குழுமம் நுழைவதற்கு வாய்ப்பில்லாத நிலையில் ஒன்றிய நெடுஞ்சாலைத்துறை இந்த வாய்ப்பை வழங்கியிருக்கிறது. இத்தகைய திட்டங்களை அதானி குழுமத்திற்கு வழங்குவதன் மூலம் ஹின்டன்பர்க் அறிக்கையால் ஏற்பட்ட இழப்பை சரிகட்டுவதற்கு மோடி அரசு அனைத்து வகைகளிலும் உதவி செய்து வருகிறது.
The post 124 கி.மீ. தேசிய நெடுஞ்சாலை அதானி குழுமத்திற்கு தாரை வார்ப்பு: ஒன்றிய அரசுக்கு செல்வபெருந்தகை கண்டனம் appeared first on Dinakaran.