பழநி : பழநி அருகே கொழுமம் சிவன் கோயிலில் 13ம் நூற்றாண்டு கல்வெட்டுகள் இருப்பதை கண்டறிந்துள்ளனர்.திண்டுக்கல் மாவட்டம், பழநி அருகே கொழுமம் வீர சோழீஸ்வரர் சிவன் கோயில் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் பழனியாண்டவர் மகளிர் கலைக்கல்லூரி தமிழ் துறை மாணவிகள் திறன் மேலாண்மை களஆய்வு மேற்கொண்டனர்.
தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி வழிகாட்டுதலில் பேராசிரியைகள் செந்தமிழ்ச்செல்வி, முத்துவிஜயலட்சுமி, ஒருங்கிணைப்பாளர் பேராசிரியை சுதாராணி, பேராசிரியர் காசிமணி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்த களஆய்வில் கிபி 13ம் நூற்றாண்டை சேர்ந்த ஒரு கல்வெட்டு கண்டறியப்பட்டது.
இதுகுறித்து தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி கூறியதாவது:
இது ஒரு துண்டு கல்வெட்டாகும். கொழுமம் அமராவதி ஆற்றங்கரை அருகே மண்ணுக்கடியில் புதைந்திருந்த இக்கல்வெட்டு மீட்கப்பட்டு கோயில் தோப்பு வளாகத்தில் தற்போது வைக்கப்பட்டுள்ளது. கோயில் அதிஸ்டானத்துக்குரிய குமுதப்பகுதியில் மொத்தம் 5 வரிகளில் இக்கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. கல்வெட்டு எழுத்துகள் உள்ள குமுதத்தின் இருமுனை பகுதிகள் சிதைந்து விட்டன.
இக்கல்வெட்டு கொங்கு சோழ மன்னர் மூன்றாம் விக்கிரம சோழரின் 2ம் ஆட்சி ஆண்டில் (கிபி 1275) பொறிக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது. யாரோ ஒருவரால் சிவன் கோயிலுக்கு அளிக்கப்பட்ட கொடையை, இக்கோயிலின் அர்ச்சகரான ஆதிசைவ சக்ரவர்த்தி கோத்திரத்து உய்யவந்தான் என்பவர் பெற்றுக் கொண்டு, 98 நியாயத்தார் முன்னிலையில் அந்த தர்மத்தை சந்திரனும், சூரியனும் உள்ளவரை காப்பதாக கல்வெட்டி கொடுத்த செய்தியை சிதைந்து போன இந்த கல்வெட்டு தெரிவிக்கிறது.
சிவதீட்சை பெற்ற ஆதிசைவ சிவாச்சாரியார்கள் எனும் அர்ச்சகர்கள் கொங்கு பகுதி கோயில்களில் இருந்ததை பல கல்வெட்டுகள் உணர்த்துகின்றன. அந்த வகையில் உய்யவந்தான் எனும் பெயர் கொண்ட இந்த ஆதிசைவ சக்ரவர்த்தியும் இக்கோயிலில் அர்ச்சகராக பணி புரிந்ததை இக்கல்வெட்டின் மூலம் அறிய முடிகிறது. அதேபோல் சோழர் ஆட்சியில் நிலவிய வலங்கை இடங்கை பிரிவு பற்றிய குறிப்பையும் இக்கல்வெட்டு உணர்த்துகிறது. 98 சாதிகளை கொண்ட இவ்வூர் பிரிவை இக்கல்வெட்டு இடங்கை நியாயத்தார் என்று குறிப்பிடுகிறது. இக்கல்வெட்டு கொங்கு சோழர் ஆட்சியில் நிலவிய சமூகச்சூழலை நமக்கு தெரிவிக்கிறது. இவ்வாறு கூறினார்.
The post 13ம் நூற்றாண்டு கல்வெட்டு பழநி அருகே கண்டுபிடிப்பு appeared first on Dinakaran.