வானம் பார்த்த கரிசல்காட்டு பூமியான விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிற்சாலைகளே பிரதானமாக உள்ளன. பட்டாசு தொழிலை நம்பி நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 9 லட்சம் குடும்பங்கள் இருக்கின்றன. பட்டாசு ஆலைகளின் மூலமாக ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் கோடி வரை புழங்குகிறது. விருதுநகர் மாவட்டத்தில் இருந்து இந்தியா முழுமைக்கும் பட்டாசுகள் அனுப்பப்படுகின்றன. இத்தகைய பட்டாசு தொழிற்சாலைகளில் கடந்த சில ஆண்டுகளாக அடிக்கடி ஏற்படும் விபத்துக்களால் பல தொழிலாளர்களின் உயிர்கள் கருகிப்போகின்றன. கடந்த 13 ஆண்டுகளில் நிகழ்ந்த 200க்கும் மேற்பட்ட விபத்துகளில் 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பட்டாசு தயாரிக்கும் போது மட்டுமில்லாமல் கோயில் திருவிழாக்களிலும் பட்டாசு வெடித்து பலர் உயிரிழக்கின்றனர். பொதுவாகவே, திருவிழாக்களில் ஆபத்தான வெடி வகைகள் வெடிக்கப்படுகின்றன. கையில் பிடித்து வீசுதல், அதிக சப்தமுள்ள வெடிகளை வெடித்தல் போன்றவை நிகழ்கின்றன. இதற்காக வெடி வாங்கி செல்பவர்கள் டூவீலர்களில் ஆபத்தான முறையில் கொண்டு செல்கின்றனர். இதனாலும் வெடி விபத்துகள் அதிகரிக்கின்றன.
இதுதொடர்பாக தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில் நடைபெற்ற விவாதத்தின்போது, பட்டாசு விபத்துகளை தடுப்பது குறித்து விருதுநகர் மாவட்டம், சாத்தூர் எம்எல்ஏ ரகுராமன் கேள்வி எழுப்பினார். இதற்கு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் பதிலளித்து பேசுகையில், ‘‘காற்றில், தண்ணீரில் இருப்பது போல மனித உடலிலும் மின்சாரம் உள்ளது. அது பட்டாசு தயாரிக்க உள்ள ரசாயனங்களில் கலக்கும்போது தீ பற்றி விபத்து ஏற்படுகிறது. ஒவ்வொரு பட்டாசு ஆலையிலும் துத்தநாக கல் வைத்திருப்பர். அதில் கையை வைக்கும் போது மனித உடலில் உள்ள மின்சாரம் டைவர்ட் ஆகிறது’’ என்று பதில் அளித்தார். அமைச்சரின் இந்த விளக்கத்தை சிலர் புரிதலின்றி சமூக ஊடகங்களில் விமர்சித்தனர்.
இதுகுறித்து பட்டாசு உற்பத்தியாளர் பொன்குமார் கூறுகையில், ‘‘மனித உடலில் உள்ள நிலை மின்சாரமும் வெடி விபத்துக்கு சில நேரங்களில் காரணமாக அமைகிறது. இதைத்தான் அமைச்சர் சி.வி.கணேசன் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு பட்டாசு ஆலைகளிலும் கெமிக்கல் செலுத்தும் அறையினுள் செல்லும் முன்பாக அறைக்கு வெளியில் தாமிர தகடுகள் அமைக்கப்பட்டிருக்கும். கெமிக்கல் அறைக்குள் செல்லும் தொழிலாளி தாமிர தகட்டில் கை, கால் பாதம் வைத்த பின்பு தான் உள்ளே செல்வார். இந்த தகட்டில் கை, கால் பாதம் வைக்கும்போது, மனித உடலில் உள்ள மின்சாரம் ‘டைவர்ட்’ ஆகிறது. இதன் மூலம் விபத்துக்கள் தடுக்கப்படுகிறது. இதில் சில நேரங்களில் சரியான அணுகுமுறை இல்லாதபோதுதான் வெடி விபத்து ஏற்படுகிறது. இதைத்தான் அமைச்சர் தெரிவித்துள்ளார்’’ என்றார்.
டாக்டர் சுசித்ரா (எ) ஆர்த்தி கூறும்போது, ‘‘நம்முடைய இதயம் இயங்குவதற்குகூட மின்சாரம்தான் உதவுகிறது என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டீர்கள். உண்மையில் இதயத்தின் ஒரு பகுதியில் சோடியம், பொட்டாசியம் உப்புகளில் ஏற்படும் ரசாயன மாற்றங்களின் விளைவாக உற்பத்தியாகும் மிகக் குறைந்த அளவு மின்சக்திதான் இதயத்தைத் தடையின்றி இயங்கச் செய்கிறது. மிகவும் நுட்பமான இந்த விஷயத்தை 1900ம் ஆண்டு டாக்டர் ஜார்ஜ் மைன்ஸ் என்பவர் யூகத்தின் அடிப்படையில் எடுத்துரைத்தார். ஆனால் 1995 வரை இதுதொடர்பான ஆராய்ச்சிகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. 1995ல் அமெரிக்க டாக்டர் மெல்ஷைன் மேன் என்பவர் மேற்கொண்ட ஆராய்ச்சியில், இதயத்தின் ஒரு பகுதியில் ஏற்படும் ரசாயன மாற்றம் காரணமாக உற்பத்தியாகும் சிறிய அளவிலான மின்சாரமே தடையின்றி இதயத்தை இயங்க வைக்கிறது என்பதை கண்டுபிடித்தார். அதன்படிப்படையில் மனித உடலில் உள்ள மின்சாரம் பட்டாசு வெடி விபத்திற்கு ஒரு காரணம் என அமைச்சர் கூறியிருக்கலாம்’’ என்றார்.
தேசிய மருந்தியல் ஆய்வக விஞ்ஞானிகள் கூறும்போது, ‘‘பொதுவாகவே, வெடிமருந்தில் எளிதில் தீப்பற்றும் உலோகங்களான பொட்டாசியம், நைட்ரேட், சோடியம் போன்றவை உள்ளன. இவை ஒவ்வொன்றும் வெவ்வேறு வகையில் எலக்ட்ரான்களை உமிழும் தன்மை கொண்டவை. வெடிக்கும் தன்மையுள்ளவை. நம் உடலிலும் எலக்ட்ரான் நகர்வுகள் இருக்கும். ஒவ்வொரு உடலுக்கும் தகுந்த வகையில் மின்தன்மையானது மாறுபடும். பட்டாசு தயாரிப்பு பணியில் ஈடுபடும்போது வெடி மருந்தில் உள்ள எலக்ட்ரான்களும், மனித உடலில் உள்ள எலக்ட்ரான்களும் ஒன்றுடன் ஒன்று மோதும்போது வெடி விபத்து நிகழ வாய்ப்புகள் உள்ளன. சில நேரங்களில் நம் கைகளில் ஈரப்பதமின்றி காணப்படும்போதும் ஒருவித உஷ்ணம் தோன்றி இதுபோன்று நிகழலாம்’’ என்றனர்.
வெடி மருந்து கலக்குவதில் தவறு
ஒவ்வொரு முறையும் விபத்து நேரும்போது வெடி மருந்து கலப்பவர்களின் தவறுகள்தான் காரணம் என்று சொல்லப்படுகிறது. நேற்று முன்தினம் சிவகாசி அருகே நெடுங்குளம் பட்டாசு ஆலை வெடி விபத்தில் 3 பேர் பலியானதற்கும் அதே காரணம்தான் கூறப்பட்டது. அப்படியானால், அனுபவம் இல்லாதவர்கள், தவறுகள் செய்பவர்கள்தான் வெடிமருந்துகள் கலக்குகிறார்களா என்ற கேள்வி எழுகிறது. இதுகுறித்து பட்டாசு ஆலைகளின் பயிற்சியாளர் விஜயகுமார் கூறும்போது, ‘‘பட்டாசு வெடி விபத்துகள் 32 சதவீதம் பட்டாசிற்கு மருந்து செலுத்தும் போதுதான் ஏற்படுகிறது. மேலும் பட்டாசு உற்பத்திக்கான கலவை தயாரித்தல், திரி வெட்டுதல், காய வைத்தல், கழிவுகளை எரித்தல், பேக்கிங் பணி, ரசாயன கலவைகளை எடுத்துச் செல்லுதல், மின்னல் தாக்குதல், புதிய வெடிகள் பரிசோதனை உள்ளிட்ட காரணங்களால் வெடி விபத்துக்கள் ஏற்படுகின்றன. இதில் பெரும்பாலும் மனித தவறு காரணமாகவே அதிகமான விபத்துகள் ஏற்படுகின்றன. பட்டாசு ஆலை வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் சிவகாசியில் உள்ள தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கத்தின் பயிற்சி மையத்தில் முறையான பயிற்சி எடுத்தால் விபத்துகளை தவிர்க்கலாம்’’ என்றார்.
வெப்பமும் காரணமா?
கடந்த சில ஆண்டுகளாகவே வெயிலின் தாக்கம் கோடைக்காலங்களில் அதிகளவு உள்ளன. சாதாரண வேலைகளையே எளிதாக பார்க்க முடியாத சூழலில், அதிகரிக்கும் வெப்பமும் காரணமாக இருக்கலாமென கூறப்படுகிறது. பொதுவாக, பட்டாசு ஆலைகளில் மின்வசதி செய்ய மாட்டார்கள். சிவகாசி போன்ற நகரங்களை கந்தக பூமி என்பார்கள். இயல்பாகவே வெப்பம் நிறைந்த பகுதியில், வெப்பநிலை அதிகரிப்பதும் விபத்துக்கான காரணமாக கூறுகின்றனர் ஆய்வாளர்கள். அதாவது, பட்டாசு தயாரிக்கும்போது வெவ்வேறு வேதிப்பொருட்களை ஒன்றாகக் கலக்கின்றனர். அப்போது இயல்பு நிலை மீறிய வெப்பமும், அவைகளுக்குள் உராய்வாக மீறி வெடி விபத்து ஏற்படுகிறது. இதுபோன்ற நேரங்களில் வெப்பம் கூடும் தருணங்களுக்கு முன்பாகவே, அதாவது காலை 9 – 10 மணிக்கு முன்பாகவே ரசாயன கலப்பு வேலைகளை செய்து விட வேண்டும். இதனால் ஓரளவு விபத்தை கட்டுப்படுத்தலாம்’’ என்றார்.
ஆயிரம் ஆலைகளுக்கு 2 அதிகாரிகளா?
நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பே சிவகாசியில் முதன் முதலாக தீப்பெட்டி தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டன. நாடு சுதந்திரம் அடைந்த பிறகு தீப்பெட்டி தொழிற்சாலைகளுக்கு லைசென்ஸ் வழங்குவது, கண்காணிப்பதற்கு என்று சிவகாசியில் ஒரு தனித்தாசில்தார் மற்றும் ரெவின்யூ இன்ஸ்பெக்டர் என்ற இரண்டு பணியிடங்கள் ஏற்படுத்தப்பட்டு, இப்போது வரை நீடிக்கிறது. தீப்பெட்டி தொழிலுக்கு பிறகு சிவகாசி பகுதியில் பட்டாசு தொழிற்சாலைகள் ஆரம்பிக்கப்பட்டன. பட்டாசு ஆலைகளை கண்காணிக்கும் பொறுப்பும் தீப்பெட்டி தொழிற்சாலை தாசில்தார் வசமே ஒப்படைக்கப்பட்டுள்ளது. முதலில் குறைந்த எண்ணிக்கையில் இருந்த பட்டாசு ஆலைகளின் எண்ணிக்கை, இப்போது 1,100ஐ தாண்டி விட்டது. ஒரே ஒரு தாசில்தார் மற்றும் ரெவின்யூ இன்ஸ்பெக்டரால் அத்தனை தீப்பெட்டி மற்றும் பட்டாசு ஆலைகளை கண்காணிப்பது என்பது நடைமுறையில் சாத்தியமில்லை. இதனால் பட்டாசு ஆலைகள், கடைகளில் விதிமீறல்கள் தொடர்ந்து கொண்டே செல்கின்றன. இவற்றை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வசதியாக 200 பட்டாசு ஆலைகளுக்கு ஒரு தனி தாசில்தார் என்று 5 தாசில்தார்கள் 100 தொழிற்சாலைக்கு ஒரு ரெவின்யூ இன்ஸ்பெக்டர் நியமிக்க வேண்டும். அப்போதுதான் பட்டாசு தொழிற்சாலைகளை கண்காணித்து ஒழுங்குப்படுத்த முடியும்.
தாமிரத்தகடு என்ன செய்யும்?
பட்டாசு ஆலை பணிக்கு செல்பவர்கள், தாமிர தகட்டில் கை வைத்து செல்வது விதிமுறைகளில் ஒன்றாக உள்ளது. இது என்ன செய்யுமென பார்க்கலாம். பொதுவாக, தாமிரங்கள் எலக்ட்ரான்களை எளிதில் கடத்துபவை. எனவே, நம் உடலில் உள்ள எலக்ட்ரான்கள் தாமிர தகட்டிற்குள் ஊடுருவும். தாமிரத்தகட்டின் மீது ஒரு கம்பியை பொருத்துவார்கள். அதன்வழியாக நம் உடலில் உள்ள பெருமளவு எலக்டரான்கள் பூமிக்குள் சேர்ந்து விடும்.
The post 13 ஆண்டுகளில் 400 பேர் உடல் கருகி பலி: மனித உடலில் உள்ள மின்சாரமும் பட்டாசு வெடி விபத்துக்கு காரணம்: அதிர்ச்சி தகவல்கள் appeared first on Dinakaran.