துபாய்: ஐசிசி தொடரின் நாக் அவுட் சுற்றில் 14 ஆண்டுகளாக ஆஸ்திரேலியாவை வீழ்த்த முடியாத சோகத்துக்கு முடிவுரை எழுதி உள்ளது இந்திய கிரிக்கெட் அணி. துபாயில் நடைபெற்ற நடப்பு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் முதல் அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை 4 விக்கெட்டுகளில் வென்று இறுதிக்கு முன்னேறி உள்ளது இந்தியா.
இந்தப் போட்டியில் 264 ரன்கள் என்ற இலக்கை விரட்டியது இந்திய அணி. கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் ஷுப்மன் கில் இணைந்து இன்னிங்ஸை ஓபன் செய்தனர். கில், 8 ரன்களில் ஆட்டமிழந்தார். கேப்டன் ரோஹித் சர்மா 29 பந்துகளில் 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மூன்றாவது விக்கெட்டுக்கு விராட் கோலி மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் இணைந்து 91 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ஸ்ரேயாஸ், 62 பந்துகளில் 45 ரன்கள் எடுத்து வெளியேறினார். ஸாம்பா பந்தில் அவர் போல்ட் ஆனார். அக்சர் படேல் 27 ரன்கள் எடுத்தார்.