பிரபல மூத்த பாடலாசிரியரான முத்துலிங்கம், 1600 பாடல்களுக்கு மேல் எழுதியுள்ளார். அதில், 250-க்கும் அதிகமான பாடல்கள் ஹிட் ஆகியுள்ளன. எம்.ஜி.ஆரின் ‘மீனவ நண்பன்’ படத்தில் வரும் ‘தங்கத்தில் முகமெடுத்து’, ‘இன்று போல் என்றும் வாழ்க’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘அன்புக்கு நான் அடிமை’, ‘வயசுப் பொண்ணு’ படத்தில் வரும் ‘காஞ்சிப் பட்டுடுத்தி கஸ்தூரி பொட்டு வச்சு’, ‘கிழக்கே போகும் ரயில்’ படத்தின் ‘மாஞ்சோலை கிளிதானோ’, ‘புதிய வார்ப்புகள்’ படத்தில் ‘இதயம் போகுதே’ என இவர் எழுதிய பல பாடல்கள் இப்போதும் டிரெண்டிங்கில் இருக்கின்றன.
இந்நிலையில் 84- வயதான பாடலாசிரியர் முத்துலிங்கத்தைக் கவுரவிக்கும் விதமாக சிறப்பு விழா ஒன்றை, தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம் நடத்துகிறது. வரும் 29-ம் தேதி மாலை 6 மணியளவில் ஆழ்வார்ப்பேட்டை நாரத கான சபாவில் நடைபெறும் விழாவில், விஐடி பல்கலைக்கழக வேந்தர் கோ.விஸ்வநாதன், இளையராஜா, நடிகர் சிவகுமார், இயக்குநர்கள் எஸ்.பி.முத்துராமன், கே.பாக்யராஜ் உட்பட திரையுலகினர் கலந்துகொண்டு பேசுகின்றனர். புத்தக வெளியீட்டு விழாவும் நடைபெறுகிறது.