வாஷிங்டன்: 1996ல் நடந்த விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் கோப்பை பறிபோனதற்கு நிர்வாணமாக ஓடிய பெண் தான் காரணம் என்று 29 ஆண்டுகள் கழித்து வீரர் ஒருவர் மனம் திறந்து கூறியுள்ளார். விளையாட்டு உலகில் மிகவும் கவுரவமிக்கதாகக் கருதப்படும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில், 1996ம் ஆண்டு நடந்த ஆடவர் ஒற்றையர் இறுதிப் போட்டி பெரும் சர்ச்சைக்குள்ளானது. அந்தப் போட்டியில் அமெரிக்க வீரர் மாலிவாய் வாஷிங்டன், நெதர்லாந்து வீரர் ரிச்சர்ட் கிராஜெக்கை எதிர்கொண்டார். போட்டி தொடங்குவதற்குச் சில நிமிடங்களுக்கு முன்பு, மெலிசா ஜான்சன் என்ற 23 வயது பெண், வீரர்கள் மற்றும் பார்வையாளர்கள் என அனைவரும் அதிர்ச்சியடையும் வகையில், சிறிய மேலங்கியை மட்டும் அணிந்துகொண்டு ஆடையின்றி நிர்வாணமாக மைதானத்தில் ஓடினார்.
வீரர்கள் கென்ட் கோமகனும், கோமகளும் கூட இந்தச் சம்பவத்தை அதிர்ச்சியுடன் பார்த்தனர். பாதுகாப்பு அதிகாரிகள் அந்தப் பெண்ணை பிடித்து அப்புறப்படுத்துவதற்குள், இந்த எதிர்பாராத சம்பவம் மைதானத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. சற்று தாமதத்திற்குப் பிறகு தான் போட்டி தொடங்கியது. இந்தப் போட்டியில் மாலிவாய் வாஷிங்டன் நேர் செட்களில் (6-3, 6-4, 6-3) படுதோல்வி அடைந்து கோப்பையை இழந்தார். அந்தத் தோல்விக்கான உண்மைக் காரணம் குறித்து கிட்டத்தட்ட 29 ஆண்டுகள் கழித்து மாலிவாய் வாஷிங்டன் தற்போது மனம் திறந்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், ‘அந்தப் பெண் மைதானத்தில் என்னைப் பார்த்து சிரித்தபடியே ஓடியபோது, நானும் அந்தப் பெண் நிர்வாணமாக ஓடியதை மிரட்சியுடன் பார்த்தேன். எனது கவனம் சிதறியது. அந்த அதிர்ச்சியிலிருந்து என்னால் மீளவே முடியவில்லை.
அதனால் குழப்பமடைந்து, அடுத்த மூன்று செட்களிலும் தோற்றுப் போட்டியிலிருந்து வெளியேறினேன். எனது தோல்விக்கு அந்த பெண் அத்துமீறி மைதானத்திற்குள் நிர்வாணமாக ஓடியதே முக்கியக் காரணம்’ என்று கூறியுள்ளார். உலகின் மிக முக்கியமான ஒரு போட்டியின்போது நடந்த இந்தச் சம்பவம், தனது மனநிலையை முற்றிலுமாகப் பாதித்துவிட்டதாக வீரர் ஒருவர் குறிப்பிட்டது, விளையாட்டு உலகில் மீண்டும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்தப் பெண் மைதானத்தில் என்னைப் பார்த்து சிரித்தபடியே ஓடியபோது, நானும் அந்தப் பெண் நிர்வாணமாக ஓடியதை மிரட்சியுடன் பார்த்தேன்.
The post 1996ல் நடந்த விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் கோப்பை பறிபோனதற்கு மைதானத்தில் நிர்வாணமாக ஓடிய பெண் தான் காரணம்: 29 ஆண்டுகள் கழித்து ஓப்பனாக அறிவித்த வீரர் appeared first on Dinakaran.