திருவள்ளூர்: ஜம்மு – காஷ்மீர், பஞ்சாப் மாநிலங்களில் நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக அங்கு வேளாண்மை, தோட்டக்கலை, மீன்வளம், பட்டுவளர்ப்பு, ஆடைவடிவமைப்பு, தேசிய தொழில்நுட்ப கழகம் உள்ளிட்ட உயர் கல்வி பயிலும் தமிழ்நாட்டை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தமிழ்நாடு திரும்ப இயலாமல் இருப்பதாகவும் அவர்களை பாதுகாப்பாக தமிழ்நாடு அழைத்துவர வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை வந்தது.
இதையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனைப்படி சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர், ஒன்றிய அரசு மற்றும் ஜம்மு – காஷ்மீர், பஞ்சாப் மாநில அரசுகளின் நிர்வாகத்துடன் பேசி ஒருங்கிணைந்து தேவையான நடவடிக்கை மேற்கொண்டு, தமிழ்நாட்டு மாணவ, மாணவியர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து தமிழ்நாட்டை சார்ந்த 37 மாணவ, மாணவிகளை ரயில் மூலம் அழைத்துவரப்பட்டனர்.
இன்று காலை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வந்த அவர்களை அமைச்சர் நாசர் வரவேற்று அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தார். ‘’தமிழக அரசால் நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அங்குள்ள மேலும் பல மாணவ, மாணவிகள் தமிழ்நாடு திரும்புவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது’’ என்று அமைச்சர் சா.மு.நாசர் தெரிவித்தார். அப்போது அயலகத் தமிழர் நலத்துறை ஆணையர் வள்ளலார், அயலகத் தமிழர் நலத்துறை வாரிய உறுப்பினர் ராம் உள்பட அதிகாரிகள் இருந்தனர்.
The post 2வது நாளாக ஜம்மு – காஷ்மீர், பஞ்சாப்பில் இருந்து வந்த தமிழக மாணவர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தார் அமைச்சர் சா.மு.நாசர் appeared first on Dinakaran.