சென்னை: தமிழக போலீஸ் டிஜிபி சங்கர் ஜிவாலின் பதவிக்காலம் நிறைவு பெறுவது குறித்து பல்வேறு விவாதங்கள் எழுந்துள்ளன. இதனால் அவர் பதவி ஏற்று 2 ஆண்டுகளில் ஓய்வு பெறுவாரா, 60 வயதில் ஓய்வு பெறுவாரா என்று தெரியாததால் காவல்துறையில் புதிய டிஜிபி குறித்து தற்போது விவாதங்கள் தொடங்கியுள்ளன. தமிழக டிஜிபியாக இருந்த சைலேந்திரபாபு, 2023 ஜூன் 30ம் தேதி ஓய்வு பெற்றார். புதிய டிஜிபியாக சங்கர் ஜிவால், அன்று மாலையே பதவி ஏற்றுக் கொண்டார். சட்டம் ஒழுங்கு டிஜிபியாக பதவி ஏற்பவர் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் வரை பணியில் இருக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், அனைத்து மாநிலங்களும் உச்சநீதிமன்ற உத்தரவை பின்பற்றி வருகின்றன.
தமிழகத்திலும் அந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது. ஒரு சட்டம் ஒழுங்கு டிஜிபியை மாநில அரசுக்கு பிடிக்கவில்லை என்றாலும், அவர் கண்டிப்பாக 2 ஆண்டுகள் பணியாற்ற அனுமதிக்க வேண்டிய கட்டாயம் இதன் மூலம் எழுந்துள்ளது. ஆனால், டிஜிபியாக பதவி வகிப்பவரே தனக்கு விருப்பம் இல்லை என்று எழுதிக் கொடுத்தால் அவரது ராஜினாமவை அரசு ஏற்க சட்டத்தில் இடம் உள்ளது.
கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் அசோக்குமார், சட்டம் ஒழுங்கு டிஜிபியாக பதவியில் இருந்தபோது தனது பதவிக்காலமான 2 ஆண்டுகள் முடிவதற்கு முன்னரே, அரசின் வற்புறுத்தல் காரணமாக, ராஜினாமா செய்ய வேண்டிய சூழ்நிலை எழுந்தது. இதனால் உளவுத்துறை டிஜிபியாக இருந்த ராமானுஜம், சட்டம் ஒழுங்கு டிஜிபி பதவியை கூடுதலாக கவனித்து வந்தார். அவர் பதவி ஓய்வு பெறும் நாளில் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக நியமிக்கப்பட்டு மேலும் 2 ஆண்டுகள் வரை பணியில் இருந்தார். தற்போதைய டிஜிபி சங்கர் ஜிவால் 2023ம் ஆண்டு ஜூன் 30ம் தேதி பதவி ஏற்றார். இதனால், அவர் 2 ஆண்டுகள் அதாவது 2025 ஜூன் 30ம் தேதி வரை பணியாற்றலாம்.
அதேநேரத்தில், ஒரு ஒன்றிய அரசின் ஊழியர் 60 வயது வரை பணியாற்றலாம். சங்கர் ஜிவால் 1965ம் ஆண்டு ஆகஸ்ட் 14ம் தேதி உத்திரகாண்ட் மாநிலம் அல்மோரா என்ற ஊரில் பிறந்தார். அவர் ஐபிஎஸ் அதிகாரி என்பதால், ஒன்றிய அரசின் ஓய்வு பெறும் வயது அவருக்கும் பொருந்தும். அதன்படி பார்த்தால் அவர் 2025ம் ஆண்டு ஆகஸ்ட் 30ம் தேதி ஓய்வு பெறுவார். இதனால் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி ஒரு டிஜிபி 2 ஆண்டுகள் வரை பணியில் இருக்கலாம் என்பதால், அதை கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டால், வருகிற ஜூன் 30ம் தேதியுடன் அவர் ஓய்வு பெற வேண்டும். அல்லது ஒன்றிய அரசின் வயது வரம்புபடி ஓய்வு பெற அனுமதிக்கப்பட்டால், ஆகஸ்ட் 30ம் தேதி ஓய்வு பெற வேண்டும்.
எப்படி எடுத்துக் கொண்டாலும் அவர் ஓய்வு பெறுவதற்கு 4 அல்லது 6 மாதங்கள் மட்டுமே உள்ளன. இதனால் தமிழக அரசு அவரது ஓய்வு பெறும் வயதை உச்சநீதிமன்ற உத்தரவுப்படி 2 ஆண்டுகளா, அல்லது ஓய்வு பெறும் வயதுபடி 60 வயதா என்று எப்படி எடுத்துக் கொள்ளப்போகிறது என்ற பரபரப்பு தற்போது போலீஸ் வட்டாரத்தில் எழுந்துள்ளது. ஆனாலும், அவர் ஓய்வு பெறுவதற்கு ஓரிரு மாதங்களே உள்ளதால், புதிய டிஜிபி குறித்த பரபரப்பு தற்போது போலீஸ் வட்டாரத்தில் எழுந்துள்ளன.
The post 2 ஆண்டுகள் பணி நிறைவா, 60 வயதா? டிஜிபி சங்கர் ஜிவால் ஓய்வு எப்போது?புதிய டிஜிபி குறித்த விவாதம் தொடக்கம் appeared first on Dinakaran.