மென்லோ பார்க்: சமூக ஊடக தளங்களின் தாய் நிறுவனமான மெட்டா உண்மை சரி பார்ப்பு உள்ளிட்ட சில கொள்கைகளை கைவிட முடிவு செய்துள்ளது. அமெரிக்க அதிபராக குடியரசு கட்சியை சேர்ந்த முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் வரும் 20ம் தேதி பதவி ஏற்க உள்ளார். இந்நிலையில் பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்களின் தாய் நிறுவனமான மெட்டா அதன் பல்வேறு கொள்கைகளை கைவிட முடிவு செய்துள்ளது.
அதன்படி இதுவரை கடைப்பிடிக்கப்பட்டு வந்த தகவல்களில் உண்மை கண்டறியும் கொள்கை கைவிடப்படுகிறது. இதனால் மெட்டா நிறுவனத்தின் சமூக ஊடக தளங்களில் வெறுப்பூட்டும் பேச்சுகள், துஷ்பிரயோகம் மற்றும் தவறான தகவல்கள் பரிமாற்றம் தொடர்பான விஷயங்களில் இதுவரை கடைப்பிடிக்கப்பட்ட கொள்கைகள் திரும்ப பெறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மெட்டா நிறுவனத்தில் இனி பன்முகத்தன்மை மற்றும் உள்ளடக்கங்களில் கவனம் செலுத்தும் குழு இனி இருக்காது. அதற்கு பதிலாக பயனர்களின் பின்னணி பற்றி பொருட்படுத்தாமல், மாறி வரும் சமூக அரசியல் நிலையை கருத்தில் கொண்டு, அனைவருக்கும் சுதந்திரமான கருத்து பகிர்வுக்கு வாய்ப்பளிப்பதை கருத்தில் கொண்டும் இந்த மாற்றங்கள் செய்யப்படுவதாக மெட்டா நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
* 15ம் தேதி பைடன் பிரியா விடை
அமெரிக்காவின் தற்போதைய அதிபர் ஜோ பைடன், டிரம்ப் பதவியேற்கும் 20ம் தேதி நண்பகல் வௌ்ளை மாளிகையில் இருந்து வௌியேற உள்ளார். இந்நிலையில் பைடன் வரும் 15ம் தேதி ஓவல் அலுவலகத்தில் இருந்து நாட்டு மக்களுக்கு பிரியா விடை உரை நிகழ்த்த உள்ளார். அப்போது, தன் ஆட்சி நிர்வாகத்தில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் பற்றி மக்களிடையே விளக்கம் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
* கமலா ஹாரிஸ் மீண்டும் போட்டியிட தகுதியானவர்
அமெரிக்க அதிபர் பைடன் கூறுகையில், “அடுத்த நான்காண்டுகளில் நடைபெறும் அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட தகுதியானவர் கமலா ஹாரிஸ். ஆனால் போட்டியிடுவது பற்றி அவரே இறுதி முடிவு எடுக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.
The post 20ம் தேதி டிரம்ப் பதவியேற்கும் நிலையில் மெட்டா கொள்கையில் திடீர் மாற்றம்: உண்மை சரிபார்ப்பு திட்டம் கைவிடப்படுகிறது appeared first on Dinakaran.