மதுரை: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 20 காளைகளை அடக்கி மதுரை பூவந்தியை சேர்ந்த அபிசித்தர் முதலிடம் பிடித்தார். அவருக்கு துணை முதல்வர் உதயநிதி சார்பில் கார் பரிசாக வழங்கப்பட்டது.
989 காளைகள் அவிழ்ப்பு: மதுரை அலங்காநல்லூரில் இன்று (ஜன.16) நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 8 சுற்றுக்களாக 989 காளைகள் அவிழ்க்கப்பட்டன. இறுதி சுற்றான 8-வது சுற்றில் 43 வீரர்கள் களமிறக்கப்பட்டனர். இதில் 20 காளைகளை பிடித்த பூவந்தி அபிசித்தர் முதலிடம் பிடித்தார். 13 காளைகளை பிடித்த பொதும்பு ஸ்ரீதர் 2-வது பரிசையும், 10 காளைகளை பிடித்த மடப்புரம் விக்னேஷ் 3-வது பரிசும், 9 காளை பிடித்த ஏனாதி அஜய் 4-வது பரிசும் பெற்றனர். முதல் பரிசு பெற்ற அபிசித்தருக்கு துணை முதல்வர் உதயநிதி சார்பில் கார், மற்றும் பசுவும், கன்றும் பரிசாக வழங்கப்பட்டது. 2-வது பரிசு ஆட்டோ, 3-வது பரிசு பைக், 4-வது பரிசு டிவிஎஸ் எக்ஸ்எல் வழங்கப்பட்டது.