சேலம்: சேலம் கிச்சிப்பாளையம் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் ஒரு ஜோடிக்கு திருமணம் ஏற்பாடு செய்திருந்தனர். இதையொட்டி மண்டபத்தில் அன்று இரவு நிச்சயதார்த்தம் நடந்தது. மணமக்கள் வீட்டார் அனைவரும் கலந்து கொண்டனர். அப்போது மணப்பெண்ணுக்கு மாப்பிள்ளை அரை பவுன் மோதிரம் அணிவித்தார். இதையடுத்து இரவு உணவு அனைவருக்கும் வழங்கப்பட்டது. இதனிடையே மறுநாள் காலை திருமணம் செய்வதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வந்தது. அப்போது மண்டபத்தில் இருந்த மணப்பெண் திடீரென மாயமானார். அவரை குடும்பத்தினர் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதனால் திருமணம் நின்றது.
இதுபற்றி மாப்பிள்ளை வீட்டார் சேலம் டவுன் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதில், எங்களுக்கு ₹3 லட்சத்திற்கும் மேல் செலவாகியுள்ளது. எனவே அந்த பணத்தை பெண் வீட்டார் தரவேண்டும் என கூறியிருந்தனர். அதற்கான ரசீதை போலீசார் கேட்டனர். அதன்மூலம் 1.25 லட்சத்திற்கும் மேல் செலவாகியிருப்பது தெரிந்தது. இதேபோல் பெண் வீட்டாரும் எங்களுக்கும் செலவாகி விட்டது. எங்களால் பணத்தை திரும்ப செலுத்த வாய்ப்பு இல்லை என தெரிவித்தனர். இருதரப்பினரும் செலவுகளை கூறிக்கொண்டிருந்த நேரத்தில், மாயமான புதுப்பெண் போலீஸ் ஸ்டேஷனில் தஞ்சமடைந்தார்.
ஓமலூர் மகளிர் காவல்நிலையத்தில் தஞ்சமடைந்த அவர், எனக்கு 20 வயதாகிறது. நான் ஒருவரை காதலித்து வந்தேன். எனது பெற்றோர் எனக்கு திருமண ஏற்பாடுகளை செய்தனர். அந்த மாப்பிள்ளைக்கு 33 வயது என தெரிவித்தனர். ஆனால் அவருக்கு 40 வயது இருக்கும். என்னை விட 20 வயது மூத்தவருக்கு திருமணம் செய்து வைக்கப் பார்த்தனர். இதனால் திருமணம் வேண்டாம் என சொன்ன போதும் அவர்கள் கேட்கவில்லை. இதனால் மண்டபத்தில் இருந்து வந்துவிட்டேன். நான் காதலிப்பவரை திருமணம் செய்து வையுங்கள்’ என்றார்.
இதையடுத்து அப்பெண் காதலிக்கும் வாலிபரை தொடர்பு கொண்ட போலீசார், விசாரணைக்கு வருமாறு அழைத்து விசாரித்து வருகின்றனர். இதனிடையே மாப்பிள்ளை வீட்டாரிடம், பணம் தொடர்பாக நீதிமன்றம் சென்று பார்த்துக்கொள்ளும்படி போலீசார் கூறி, அவர்களை அனுப்பி வைத்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
The post 20 வயது மூத்தவருடன் திருமண ஏற்பாடு மண்டபத்திலிருந்து மணமகள் ‘எஸ்கேப்’: போலீசில் தஞ்சம் appeared first on Dinakaran.