சென்னை: 20 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரியும் கவுரவ விரிவுரையாளர்களை தமிழ்நாடு அரசு பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என அதிமுக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு உயர் கல்வியை போதிக்கும் உன்னதமானப் பணியினை கடந்த இருபது ஆண்டு காலமாக கெளரவ விரிவுரையாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழ்நாட்டில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் 7 அரசு கல்வியியல் கல்லூரிகள் என மொத்தம் 171 அரசு கல்லூரிகளில் 7,300-க்கும் மேற்பட்ட கெளரவ விரிவுரையாளர்கள் கடந்த இருபது ஆண்டுகளாக பணியாற்றி வருகின்றனர். இவர்கள் அனைவரும் முதுகலைப் பட்டம், முனைவர் பட்டம் ஆகியவற்றை பெற்று தங்கள் பணி என்றாவது ஒரு நாள் நிரந்தரம் செய்யப்படும் என்ற எண்ணத்தில் மாதம் 25,000 ரூபாய் சம்பளத்தில் பணியாற்றி வருகின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் அவர்களுக்கு சம்பளம் வழங்கப்படுவதில்லை. அதாவது, ஒர் ஆண்டிற்கு 11 மாத சம்பளம் மட்டுமே பெற்று வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் 45 வயதைக் கடந்தவர்கள். மேற்படி கௌரவ விரிவுரையாளர்களுக்கு 57,500 ரூபாய் மாத ஊதியம் தர வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக் குழு உத்தரவிட்டிருந்தது. இந்த ஊதியத்தினைத் தர சென்னை உயர் நீதிமன்றமும் உத்தரவிட்டிருந்தது. இருந்தாலும் இதுநாள் வரை இந்த உத்தரவு நிறைவேற்ற ப்படவில்லை.
அதே சமயத்தில், கல்விப் பணியை தவிர நிர்வாகப் பணிகளும் கௌரவ விரிவுரையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளன. இந்த நிலையில், பல்கலைக்கழக மானியக் குழு நிர்ணயித்த ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும், சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பினை செயல்படுத்த வேண்டும், தங்களது பணியை நிரந்தரம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கௌரவ விரிவுரையாளர்கள் கடந்த ஒரு வார காலமாக வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
முதலமைச்சர் இதில் உடனடியாக தனிக் கவனம் செலுத்தி, அவர்களுடைய கோரிக்கையில் உள்ள நியாயத்தை புரிந்து கொண்டு, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கெளரவ விரிவுரையாளர்களை அழைத்துப் பேசி, பல்கலைக்கழக மானியக் குழு நிர்ணயித்த ஊதியத்தை சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்புப்படி நடைமுறைப்படுத்தவும், படிப்படியாக அவர்களை நிரந்தரம் செய்யவும், போராட்டக் காலத்தை பணிக் காலமாக கருதி அவர்களுக்குரிய ஊதியத்தை வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு தெரிவித்தார்.
The post 20 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரியும் கவுரவ விரிவுரையாளர்களை தமிழ்நாடு அரசு பணி நிரந்தரம் செய்ய வேண்டும்: ஓ.பி.எஸ் கோரிக்கை appeared first on Dinakaran.