சென்னை: நல வாரியத்தில் பதிவு செய்துள்ள 2,000 இணையம் சார்ந்த சேவைப் பணித் தொழிலாளர்களுக்கு புதிதாக இருசக்கர மின் வாகனம் (e-Scooter) வாங்கும் பொருட்டு தலா 20,000 ரூபாய் மானியமாக வழங்கும் புதிய திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்படும் என்று தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.
2025-26-ம் நிதி ஆண்டுக்கான தமிழக பொது பட்ஜெட்டை, சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று (மார்ச் 14) காலை தாக்கல் செய்தார். தொழிலாளர் நலன் சார்ந்த அறிவிப்புகளை வெளியிட்டு அவர் பேசுகையில், “வேகமாக வளர்ந்து வரும் இணையம் சார்ந்த பொருளாதாரச் சூழலில், இணையம் சார்ந்த சேவைப் பணிகளில் ஈடுபடும் இளைஞர்களின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்துவரும் நிலையில், இத்தொழிலாளர்களின் நலனுக்காக தமிழ்நாடு இணையம் சார்ந்த தற்சார்புத் தொழிலாளர்கள் நலவாரியம் (Gig Workers Welfare Board) உருவாக்கப்பட்டது.