சென்னை: கடந்த 17 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த பிரபல தாதா வெங்கடேச பண்ணையாரின் நெருங்கிய கூட்டாளி ஜனார்த்தனனை மத்திய குற்றப்பிரிவு தனிப்படை போலீசார் கைது செய்தனர்.சென்னையை சேர்ந்த தொழிலதிபர் முகமது சமீர். இவர் லீடர் கேப்பிட்டல் சர்வீஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக இருந்தார்.
இவரது நிறுவனத்தில் வியாபாரம் நோக்கில் ஜெய்கணேஷ் என்பவர் நடத்திய நிறுவனம் ஒன்றாக உடன்படிக்கை ஒப்பந்த அடிப்படையில் பல லட்சம் முதலீடு செய்தார். இதன் பின்னர் முதலீடு செய்த பணத்தை திரும்ப கேட்டுள்ளார். அதற்கு தொழிலதிபர் முகமது சமீர், ‘’தொழிலில் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் உங்கள் பணத்தை திரும்ப கொடுக்க முடியாது’’ என்று கூறியதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த ஜெய்கணேஷ், தென் மாவட்டங்களில் மிகவும் செல்வாக்கான தாதாவாக வலம் வந்த வெங்கடேச பண்ணையாரிடம் முறையிட்டுள்ளார். இதன்பிறகு வெங்கடேச பண்ணையார், கடந்த 2003ம் ஆண்டு ஆகஸ்ட் 13ம் தேதி, தொழிலதிபர் ஜெய்கணேஷ் மற்றும் அவரது கூட்டாளிகளான பாலமுரளி, கோபி, முருகன்(எ)பொய்யா முருகன், ஜான்சன், கணேசன்(எ)காட்டான் கணேசன், சண்முகம்(எ) சண்முக வடிவேல், கோகுல், ஜனார்த்தனன் ஆகியோருடன் கீழ்ப்பாக்கத்தில் உள்ள தொழிலதிபர் முகமது சமீர் அலுவலகத்துக்கு துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் சென்றுள்ளனர்.அங்கு பணியில் இருந்த பெண் ஊழியர்களை மிரட்டியும், மேலாளர் மற்றும் கணக்காளர் ஆகியோரை துப்பாக்கி முனையில் மிரட்டியதுடன் நிரப்பப்படாத 7 காசோலைகளில் தொழிலதிபர் முகமது சமீரின் கையெழுத்தை பெற்றுக்கொண்டு அதில் ரூ.41 லட்சத்து 80 ஆயிரம் நிரப்பி சென்றுள்ளனர்.
அதைதொடர்ந்து போலீசார் வெங்கடேச பண்ணையார், தொழிலதிபர் ஜெய்கணேஷ் உட்பட 10 பேர் மீது கொலை மிரட்டல், மோசடி, கூட்டு சதி உள்ளிட்ட சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஜெய்கணேஷ், பாலமுரளி, கோபி, முருகன் (எ)பொய்யா முருகன், ஜான்சன், கணேசன்(எ)காட்டான் கணேசன், சண்முகம்(எ) சண்முக வடிவேல் ஆகிய 7 பேரை கைது செய்தனர்.
ஆனால் இந்த மோசடி வழக்கில் வெங்கடேச பண்ணையார் தலைமறைவாக இருந்தார். அந்த சமயத்தில் சென்னை போலீஸ் கமிஷனராக இருந்த விஜயகுமார் தலைமையிலான போலீசார், வெங்கடேச பண்ணையாரை கடந்த 2003ம் ஆண்டு செப்டம்பர் 26ம்தேதி அதிகாலை சென்னை நுங்கம்பாக்கம் ஏரிக்கரை சாலையில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் பதுங்கி இருந்தபோது என்கவுன்டர் செய்தனர்.
பின்னர் இந்த மோசடி வழக்கில் மீண்டும் விசாரணை நடத்தப்பட்டு எழும்பூர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. மேலும் இந்த வழக்கில் கோகுல், ஜனார்த்தனன் ஆகியோர் தலைமறைவாக தொடர்ந்து இருந்தனர். நீதிமன்றம், கடந்த 2008ம் ஆண்டு ஜனவரி 5ம்தேதி கோகுல், ஜனார்த்தனன் ஆகியோருக்கு பிடியாணை பிறப்பித்தது. ஆனால் இருவரையும் போலீசார் கைது செய்ய முடியவில்லை. அதன்பிறகு இந்த மோசடி வழக்கு கிடப்பில் போடப்பட்டது.
இதனிடையே சென்னை பெருநகர காவல்துறை கமிஷனராக பதவியேற்ற அருண், மத்திய குற்றப்பிரிவில் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் ராதிகாவுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து மத்திய குற்றப்பிரிவின் நம்பிக்கை ஆவணங்கள் மோசடி பிரிவு இன்ஸ்பெக்டர் சிவகுமார் தலைமையிலான குழுவினர் மீண்டும் விசாரணை நடத்தினர்.
தலைமறைவாக இருந்துவந்த கோகுல் கடந்த 2017ம் ஆண்டு இறந்துவிட்டது தெரியவந்தது. மற்றெருவரான ஜனார்த்தனன் உயிருடன் இருப்பது தெரியவந்தது. உடனே போலீஸ் கமிஷனரின் உத்தரவுப்படி கடந்த 17 ஆண்டுகளாக போலீசாரை ஏமாற்றி வரும் வெங்கடேச பண்ணையாரின் வலது கரமாக இருந்த அவரது கூட்டாளி ஜனார்த்தன்(70) தொடர்பான ஆவணங்களை இன்ஸ்பெக்டர் சிவகுமார் தலைமையிலான தனிப்படையினர் சேகரித்தனர்.
அப்போதுதான் ஜனார்த்தனன் பல ஆண்டுகளாக செல்போன் பயன்படுத்தாமல் இருந்து வந்தது தெரியவந்தது. அதேநேரம் ஜனார்த்தனன் தற்போதைய உறவினர்களை தனிப்படையினர் கடந்த ஒரு மாதமாக கண்காணித்தனர். அப்போதுதான் சென்னை எம்ஜிஆர்.நகர், கலைஞர் நகர், மூவேந்தர் தெருவில் உள்ள ஒரு வீட்டில் பல ஆண்டுகளாக பதுங்கியபடி ஜனார்த்தனன் இருப்பது தெரியவந்தது.
அதை உறுதி செய்த தனிப்படையினர் கடந்த 28ம் தேதி அதிரடியாக அந்த வீட்டிற்குள் புகுந்து ஜனார்த்தனனை கைது செய்தனர். இதன் மூலம் கடந்த 17 ஆண்டுகளான தலைமறைவாக இருந்தும், நீதிமன்றதால் பிடியணை பிறப்பிக்கப்பட்ட முக்கிய குற்றவாளி ஜனார்த்தனனை தனிப்படையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கடந்த 17 ஆண்டுகளாக கிடப்பில் இருந்த வழக்கை திறமையாக கையாண்டு குற்றவாளியை கைது செய்த இன்ஸ்பெக்டர் சிவகுமார் தலைமையிலான குழுவினருக்கு போலீஸ் கமிஷனர் அருண் பாராட்டு தெரிவித்து உள்ளார்.
The post 2003ம் ஆண்டு தொழிலதிபரை துப்பாக்கி முனையில் மிரட்டி பணம் பறித்த வழக்கு வெங்கடேச பண்ணையாரின் நெருங்கிய கூட்டாளி 17 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் கைது: குற்றவாளியை பிடித்த தனிப்படைக்கு போலீஸ் கமிஷனர் அருண் பாராட்டு appeared first on Dinakaran.