வாஷிங்டன் : 2020ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு ட்ரம்ப் வெற்றி பெற்று இருந்தால் ரஷ்யா – உக்ரைன் இடையே போர் ஏற்பட்டு இருக்காது என்று ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார். ரஷ்யாவிற்கும் உக்ரைனிற்கும் 2 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வரும் போரில் இரு தரப்பிலும் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். போரை முடிவுக்கு கொண்டு வர, சர்வதேச அளவில் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. இந்த நிலையில், அமெரிக்க அதிபராக பதவியேற்ற ட்ரம்ப், அமெரிக்காவில் வலுவான அதிபர் பதவியில் இருந்திருந்தால் ரஷ்யா – உக்ரைன் இடையே போர் ஏற்பட்டு இருக்காது என்று தெரிவித்தார். தனது ஆட்சி காலத்தில், உக்ரைன் மீது தாக்குதல் நடத்த ரஷ்யா தயங்கும் என்ற அவர், ரஷ்ய அதிபர் புதின் அமைதி பேச்சுவார்த்தைக்கு முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
இல்லையென்றால், அந்நாட்டின் மீது மிக கடுமையான பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என்று ட்ரம்ப் எச்சரித்தார். இதற்கு பதில் அளிக்கும் வகையில், பேட்டி அளித்துள்ள புதின், 2020ம் ஆண்டு தேர்தலில் ட்ரம்பின் வெற்றி பறிக்கப்படாமல் இருந்திருந்தால், ரஷ்யா – உக்ரைன் இடையே போர் ஏற்பட்டு இருக்காது என்றும் கூறியுள்ளார். ட்ரம்ப் ஒரு புத்திசாலி என்று பாராட்டி உள்ள அவர், நடைமுறை எதார்த்தங்களை அறிந்தவர் ட்ரம்ப் என்றும் உக்ரைன் மீதான போரை நிறுத்துவதற்கு பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார். ரஷ்யா மீது ட்ரம்ப் பொருளாதார தடை விதிப்பார் என்று எதிர்பார்க்கவில்லை என்றும் ஏனென்றால், அது அமெரிக்க பொருளாதாரத்தையும் பாதிக்கும் என்றும் புதின் கூறினார். இருவரும் சந்தித்து பேசினால் முக்கிய பிரச்சனைகளில் சுமூக உடன்பாடு ஏற்படும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். ஆனால் எங்கு, எப்போது பேச்சுவார்த்தை நடைபெறும் என்பது குறித்து புதின் எதுவும் கூறவில்லை.
The post 2020ம் ஆண்டு தேர்தலில் ட்ரம்பின் வெற்றி பெற்றிருந்தால், ரஷ்யா – உக்ரைன் இடையே போர் ஏற்பட்டு இருக்காது : அதிபர் புதின் அறிவிப்பு!! appeared first on Dinakaran.