நியூயார்க்: இந்தியாவில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த அமெரிக்காவை ஆண்ட முந்தைய ஜோ பைடன் அரசு விரும்பியது. அதனால்தான் இந்தியாவில் வாக்கு சதவீதத்தை அதிகரிக்க அமெரிக்க அரசு நிதியுதவி வழங்கியதாக கருதுகிறேன். இந்தியாவில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த லஞ்சம் வழங்கப்பட்டுள்ளது என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்தியாவில் தேர்தலின்போது வாக்கு சதவீதத்தை அதிகரிக்க அமெரிக்க அரசு வழங்கி வந்த ரூ.182 கோடி நிதியுதவியை நிறுத்துவதாக எலான் மஸ்க் தலைமையிலான டிஓஜிஇ குழு சமீபத்தில் அறிவித்தது. இது தொடர்பாக அமெரிக்க அதிபர் ட்ரம்பிடம் கேட்டபோது, ‘‘இந்தியா மீதும் பிரதமர் மோடி மீதும் எனக்கு மிகுந்த மரியாதை இருக்கிறது. ஆனால், இந்தியாவில் வாக்கு சதவீதத்தை அதிகரிக்க அமெரிக்கா ஏன் ரூ.182 கோடி நிதியுதவி அளிக்க வேண்டும்’’ என்று கேள்வி எழுப்பினார்.