சென்னை: 2024-25 நிதி ஆண்டில் டிச.23ம் தேதி வரை வணிகவரித்துறையில் ₹99,875 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது என வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்தார். சென்னை, நந்தனம் ஒருங்கிணைந்த வணிகவரி (ம) பதிவுத்துறை அலுவலகக் கூட்டரங்கில் 2024ம் ஆண்டு நவம்பர் மாதத்திற்கான அனைத்து இணை ஆணையர்களின் பணித்திறன் குறித்த ஆய்வுக்கூட்டம் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தலைமையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மறைந்த வணிகர்களின் குடும்பத்தினரான திருத்துறைப்பூண்டியை சேர்ந்த சுசிலா, ராசிபுரத்தை சேர்ந்த கஸ்தூரி மற்றும் திருவண்ணாமலையை சேர்ந்த விஜயலட்சுமி ஆகிய மூன்று நபர்களுக்கு தமிழ்நாடு வணிகர் நல வாரியத்தின் சார்பில் குடும்ப நல நிதி உதவியாக தலா ₹3,00,000 காசோலையை அமைச்சர் மூர்த்தி வழங்கினார்.
வணிகவரித்துறை வருவாய் நடப்பு 2024-25 நிதி ஆண்டில் டிசம்பர் மாதம் 23ம் தேதி வரை ₹99,875 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது என அமைச்சர் தெரிவித்தார். மேலும் வரி வருவாய் வளர்ச்சியில் இந்திய அளவில் தற்பொழுது தமிழ்நாடு மாநிலம் முதன்மையாக விளங்குவதை சுட்டிகாட்டி வரும் மாதங்களில் அனைத்து இணை ஆணையர்களும் மேலும் சிறப்புடன் உரிய பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.
இக்கூட்டத்தில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளர் பிரஜேந்திர நவ்நீத், வணிகவரித்துறை ஆணையர் ஜகந்நாதன், வணிகவரித்துறை கூடுதல் ஆணையர்கள், இணை ஆணையர்கள், மற்றும் வணிகவரித்துறை உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
The post 2024-25 நிதி ஆண்டில் வணிகவரித்துறையில் இதுவரை ரூ.99,875 கோடி வருவாய்: அமைச்சர் மூர்த்தி தகவல் appeared first on Dinakaran.