2025 புத்தாண்டு நாளில் இந்தியாவின் முதல் ‘ஜென் பீட்டா’ குழந்தை பிறந்துள்ளது. ஜனவரி 1 ஆம் தேதி அதிகாலை 12.03 மணிக்கு பிறந்த பெண் குழந்தை இந்தியாவின் முதல் ‘ஜென் பீட்டா’ குழந்தை என்று அறியப்படுகிறது. மிசோரம் மாநிலம் அய்ஸ்வாலில் பிறந்த அந்தப் பெண் குழந்தைக்கு ஃப்ராங்கி ரெமுராடிகா ஜடேங் எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. குழந்தை பிறக்கும்போது 3.12 கிலோ எடையுடன் ஆரோக்கியமாக இருந்ததாக மருத்துவமனை தெரிவித்துள்ளது. மகப்பேறு மருத்துவர் வன்லாகிமா குழந்தைப் பேறு அறுவை சிகிச்சை இன்றி இயல்பாக நடந்தது என்றும் தாயும் சேயும் நலம் என்றும் தெரிவித்துள்ளார்.
அதென்ன ஜென் பீட்டா குழந்தை? ‘ஜென் பீட்டா’ என்ற பதத்தை ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த எதிர்காலஞ்சார் ஆராய்ச்சியாளர் மார்க் மெக் கிரிண்டில் உருவாக்கியுள்ளார். 2025 ஆம் ஆண்டு முதல் 2039 ஆன் ஆண்டு வரை பிறக்கும் குழந்தைகள் ‘ஜென் பீட்டா’ குழந்தைகள் என அழைக்கப்படுவார்கள் என்று அவர் கூறுகிறார். இவர்கள் மில்லனியல்ஸ் என்றழைக்கப்படும் ஜென் y அல்லது ஜென் z பெற்றோர்களுக்குப் பிறப்பவர்கள். 2035 ஆம் ஆண்டளவில் உலகம் முழுவதும் உள்ள மக்கள் தொகையில் 16 சதவீதம் பேர் ‘ஜென் பீட்டா’ தலைமுறையினராக இருப்பார்கள். இவர்கள் பங்களிப்பு சர்வதேச சமூக, பொருளாதார சூழலில் முக்கியத்துவம் வகிக்கும் என்று மெக் கிரிண்டில் கணிக்கிறார்.