சென்னை: 2025-26ல் மட்டும் 3,000 பேருந்துகள் வாங்க டெண்டர் கோரப்பட்டுள்ளதாக சட்டப்பேரவையில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் கடந்த மாதம் 14-ந் தேதி பொது பட்ஜெட்டும், 15-ந் தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து, 17-ந் தேதி முதல் இரு பட்ஜெட்டுகள் மீதான விவாதம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, 24-ந் தேதி முதல் துறை வாரியாக மானியக் கோரிக்கை விவாதம் நடந்து வருகிறது. இதற்கிடையே, சட்டப்பேரவை கூடிய நிலையில், போக்குவரத்துத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அதற்கு அந்த துறையை சேர்ந்த அமைச்சர் அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்து வருகிறார். அதில்,
ஓட்டுநர், நடத்துநரை தனித்தனியாக நியமிக்க நடவடிக்கை
வரும் காலங்களில் ஓட்டுநர், நடத்துநரை தனித் தனியாக நியமிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 7 போக்குவரத்துக் கழகங்களில் 3,274 பேரை பணிக்கு எடுக்க நடவடிக்கை. 2025-26ல் மட்டும் 3,000 பேருந்துகள் வாங்க டெண்டர் விடப்பட உள்ளது.
சென்னையில் 600 மின்சார பேருந்துகளை இயக்க முடிவு
சென்னையில் முதற்கட்டமாக 600 மின்சார பேருந்துகளை இயக்க நடவடிக்கை.
6 பேருந்து முனையங்கள் மேம்படுத்தப்படும்
சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தின் கீழ் செயல்படும் 6 பேருந்து முனையங்கள் மேம்படுத்தப்படும். 50 பேருந்து பணிமனைகளில் உட்கட்டமைப்புகள் புதுப்பிக்கப்படும். தஞ்சை, நெல்லை, ஈரோடு, திண்டுக்கல், தருமபுரியில் உள்ள தானியங்கி பணிமனைகள் தரம் உயர்த்தப்படும். ஸ்ரீபெரும்புதூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு சொந்த கட்டடம் கட்டப்படும்.
சாலை பாதுகாப்பு நிதி ரூ.130 கோடியாக உயர்வு
போக்குவரத்து, சாலை பாதுகாப்பு ஆணையகத்தில் நூலகம் அமைக்க ரூ.50 லட்சம் ஒதுக்கீடு. சேலம் தேவன்னகவுண்டனூரில் ஓட்டுநர் பயிற்சி, ஆராய்ச்சி நிறுவனம் அமைக்கப்படும். 2025-26க்கான சாலை பாதுகாப்பு நிதி ரூ.65 கோடியில் இருந்து ரூ.130 கோடியாக உயர்த்தப்படும்.
673 கோடி முறை பெண்கள் கட்டணமின்றி பயணம்
விடியல் பயணம் திட்டத்தின்கீழ் இதுவரை பெண்கள் 673 கோடி முறை பேருந்துகளில் கட்டணமின்றி சென்றுள்ளனர் என சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட போக்குவரத்துத்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.
1000 பேருந்துகள் இயற்கை எரிவாயு பேருந்தாக்கப்படும்
1000 டீசல் பேருந்துகளை சிஎன்ஜி எனப்படும் இயற்கை எரிவாயு பேருந்துகளாக மாற்றுவதற்கு அரசு திட்டம். 746 புதிய சிஎன்ஜி பேருந்துகளை கொள்முதல் செய்ய திட்டம். 2025-26ல் 1768 சிஎன்ஜி பேருந்துகளை இயக்க திட்டமிப்பட்டுள்ளதாக கொள்கை விளக்கக் குறிப்பில் தகவல் வெளியாகி உள்ளது.
The post 2025-26ல் 3,000 பேருந்துகள் வாங்க டெண்டர் விடப்பட்டுள்ளது: சட்டப்பேரவையில் அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு appeared first on Dinakaran.