சென்னை: மூழ்கும் கப்பலில் யாரும் ஏறமாட்டார்கள். அழிவிலிருந்து மீட்டெடுக்க வேண்டுமென்றால், நன்றி மறந்த, துரோகத்தின் மறுவுருவமாக விளங்குகின்ற, ஆணவச் செருக்குடைய, பொய்மையின் மறுவடிவமாக திகழ்கின்ற நய வஞ்சகம் அகற்றப்பட வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “கூடி வாழ்தல், கேடு செய்யாதிருத்தல், உழைத்துப் பிழைத்தல், பகிர்ந்து அளித்தல் என்பவை பாராட்டத்தக்க பண்புகள் என்ற நிலை மாறி, இவையே மனித குலத்தின் வாழ் முறைகள் என்றாக வேண்டும் என்கிறார் அண்ணா. இந்தப் பண்புகள் எல்லாம் மனிதனை விலங்கினின்று வேறுபடுத்திக் காட்டுவதாகும். இந்தப் பண்புகள் இல்லாதவர்கள் ஒழுக்கமற்றவர்கள் என்பதுதான் அண்ணாவின் பார்வை. தனி வாழ்வில் ஒழுக்கமற்றவன் பொது வாழ்விலும் ஒழுக்கமற்றவனாகவே இருப்பான் என்பது கம்பனின் அரசியல் பார்வை.