புதுச்சேரி: எம்ஜிஆர் பிறந்தநாளையொட்டி நேற்று புதுச்சேரி வந்த அம்மா மக்கள் முன்னேற்ற கழக தலைவர் டிடிவி தினகரன், புதிய பேருந்து நிலையம் எதிரே உள்ள எம்ஜிஆரின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வலுவாகி வருகிறது. வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் வென்று காட்டுவோம். ஈரோடு இடைத்தேர்தல் தமிழ்நாட்டின் தலையெழுத்தை மாற்றி அமைக்கப்போவதில்லை. 2026 சட்டமன்ற தேர்தல்தான் மாற்றியமைக்கும். ஆகையால்தான் தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் எதிர்க்கட்சிகள் அனைவரும் இந்த தேர்தலை புறக்கணித்துள்ளோம்.
அதிமுக விக்கிரவாண்டி இடைத்தேர்தலை பயத்தின் காரணமாக புறக்கணித்ததுபோல் இந்த தேர்தலையும் புறக்கணித்துள்ளது. 2026 சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு பழனிசாமி என்கின்ற சுயநல மனிதருடைய ஆட்டம் ஓய்ந்துவிடும். ஜெயலலிதாவின் தொண்டர்கள் அனைவரும் 2026 தேர்தலுக்கு முன்பாகவே விழித்துக் கொள்ள வேண்டும். பழனிசாமி கட்சியின் தலைவராகவும், முதல்வராகவும் ஆனது. அது அவருக்கு கிடைத்த லாட்டரி. 2026 சட்டமன்ற தேர்தலுக்குப்பின் அந்த கட்சியை விட்டு அவர் விலகி ஓடிவிடுவார். இவ்வாறு அவர் கூறினார்.
The post 2026 தேர்தலுக்கு பின் எடப்பாடி ஆட்டம் ஓய்வு பயத்தால் இடைத்தேர்தலை அதிமுக புறக்கணிப்பு: டிடிவி.தினகரன் பேட்டி appeared first on Dinakaran.