திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்றத் தொகுதிகளில் திண்டுக்கல், நத்தம், நிலக்கோட்டை (தனி) தொகுதிகளை இப்போது அதிமுக தன்வசமாக்கி வைத்திருக்கிறது. இதில், சுமார் அரை நூற்றாண்டு காலமாக வென்றெடுக்க முடியாமல் இருக்கும் நிலக்கோட்டையை வென்றெடுக்க இம்முறை திட்டம் வகுத்து செயலாற்றி வருகிறது திமுக.
நிலக்கோட்டை தொகுதியானது காங்கிரஸ் பாரம்பரியமிக்க தொகுதி. 1952, 1957, 1962-ம் ஆண்டு தேர்தல்களில் இங்கு காங்கிரஸே கொடி நாட்டி இருக்கிறது. 1967-ல் தான் திமுக இங்கு முதல்முறையாக வாகை சூடியது. அதற்கு அடுத்து வந்த தேர்தலிலும் திமுக-வுக்கு நிலக்கோட்டை நிலைத்தது. அதுதான் இந்தத் தொகுதியில் திமுக கடைசியாக வென்ற தேர்தல். அதன் பிறகு இங்கு சூரியனுக்கு வேலையே இல்லாமல் போய்விட்டது.