புதுடெல்லி: 2025-26-ஆம் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.3% முதல் 6.8% வரை இருக்கும் என்று நாடாளுமன்றத்தில் இன்று (ஜன.31) தாக்கல் செய்யப்பட்ட 2024-25-ம் ஆண்டின் பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் உரை நிகழ்த்தினார். இதையடுத்து, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பொருளாதார ஆய்வறிக்கையை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். பொருளாதார ஆய்வறிக்கையில் முக்கிய அம்சங்கள்: "2025-ஆம் ஆண்டில் இந்தியப் பொருளாதாரம் 6.6% வளர்ச்சியடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முதன்மையாக வலுவான தனியார் நுகர்வு மற்றும் முதலீடுகள் துணைபுரிகின்றன. இந்தியாவின் வலுவான செயல்திறன் காரணமாக தெற்காசியாவில் பொருளாதார வளர்ச்சி இந்த ஆண்டு வலுவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது" என்று ஐக்கிய நாடுகள் சபை அறிக்கை கூறுகிறது.