சென்னை: “தமிழகத்தில் கூட்டணி ஆட்சியை உருவாக்க வேண்டும். அதில் பட்டியலின மக்கள் பங்கேற்க வேண்டும். இங்கே மன்னராட்சிதான் நிலவுகிறது. கேள்வி கேட்டால் உடனே சங்கி என்கிறார்கள். தமிழகத்தில் மன்னராட்சிக்கு இடமில்லை. 2026-ல் மன்னராட்சி முழுமையாக ஒழிக்கப்படும்” என ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.
அம்பேத்கர் நினைவு நாளான இன்று (டிச.6) ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ புத்தக வெளியீட்டு விழா சென்னையில் உள்ள வர்த்தக மையத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் அம்பேத்கரின் பேரன் ஆனந்த் டெல்டும்டே, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், முன்னாள் நீதிபதி கே.சந்துரு, விசிக துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.