சென்னை: ‘2047-ம் ஆண்டுக்குள் உலக அளவில் சிறந்த துறைமுகங்களை கொண்ட 10 நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக இருக்கும்’ என மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிகள் துறை அமைச்சர் சர்பானந்தா சோனோவால் தெரிவித்தார்.
சென்னை துறைமுக ஆணையத்தின் துணை நிறுவனமான காமராஜர் துறைமுகம் தொடங்கப்பட்டு 25 ஆண்டுகள் ஆவதை முன்னிட்டு, வெள்ளி விழா கொண்டாட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. வரவேற்புரை ஆற்றி காமராஜர் துறைமுகத்தின் மேலாண்மை இயக்குநர் ஐரீன் சிந்தியா பேசும்போது, “காமராஜர் துறைமுகம் 1999-ம் ஆண்டு தொடங்கப்பட்டது 2001-ம் ஆண்டு முதல் செயல்பட தொடங்கியது. 2023-24-ம் ஆண்டு 45.28 டன் சரக்குகள் கையாளப்பட்டன. வரும் 2047-ம் ஆண்டுக்குள் துறைமுகத்தின் சரக்கு கையாளும் திறன் 254 மெட்ரிக் டன்னாக அதிகரிக்கும். மேலும், தற்போது 9 ஆக உள்ள கப்பல்களை நிறுத்தும் தளம் 27 ஆக அதிகரிக்கப்படும்” என்றார்.