சென்னை: மூன்று நாட்கள் விடுமுறைக்கு பிறகு தமிழக சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடுகிறது. நெடுஞ்சாலை, பொதுப்பணித்துறை மானியக்கோரிக்கை மீது விவாதம் நடக்கிறது. தமிழக அரசின் 2025-26ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை கடந்த 14ம் தேதி தமிழக சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். 15ம் தேதி வேளாண்மை பட்ஜெட்டை வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். தொடர்ந்து கடந்த 17ம் தேதி முதல் 20ம் தேதி வரை நிதிநிலை அறிக்கைகளின் மீது விவாதம் நடந்தது. 21ம் தேதி பொது விவாதத்திற்கு பதில் அளித்து நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் பதிலளித்து பேசினர்.
அதன் பிறகு கடந்த 24ம் தேதி முதல் துறை ரீதியான மானியக்கோரிக்கைள் மீது விவாதம் தொடங்கி நடந்து வருகிறது. கடைசியாக கடந்த 28ம் தேதி கதர், கிராம தொழில்கள் மற்றும் கைவினை பொருட்கள். வனம், கைத்தறி மற்றும் துணி நூல் துறை மானியக்கோரிக்கை நடந்தது. அன்றைய தினம் அதிமுக எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டதால் அவைக்காவலர்கள் மூலம் வெளியேற்றப்பட்டனர். ஒரு நாள் முழுவதும் அவர்களை சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார்.
தொடர்ந்து 29ம் தேதி (சனிக்கிழமை), 30ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை), 31ம் தேதி (நேற்று) ரம்ஜான் பண்டிகை என தொடர்ச்சியாக விடுமுறை அளிக்கப்பட்டது. 3 நாட்கள் விடுமுறைக்கு பிறகு இன்று காலை 9.30 மணிக்கு சட்டப்பேரவை கூடுகிறது. கூட்டம் தொடங்கியதும் கேள்வி நேரம் எடுத்துக்கொள்ளப்படும். தொடர்ந்து துறைரீதியான மானியக்கோரிக்கை நடைபெறும். இன்று நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை, கட்டிடங்கள் (பொதுப்பணித்துறை) மீதான விவாதம் நடக்கிறது. விவாதத்தில் எம்எல்ஏக்கள் பேசுவர். இதற்கு பதில் அளித்து துறை அமைச்சர் எ.வ.வேலு புதிய அறிவிப்புகளை வெளியிடுவார்.
தொடர்ந்து 2ம் தேதி (நாளை) வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை. கால்நடை பராமரிப்பு, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, 3ம் தேதி வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, இயற்கை சீற்றங்கள் குறித்த துயர் தணிப்பு துறை மானியக்கோரிக்கை மீது விவாதம் நடக்கிறது. 29ம்தேதி காவல், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள், 30ம் தேதி காவல், தீயணைப்பு துறை மீதான விவாதம் தொடர்ச்சி, முதல்வர் மு.க.ஸ்டாலினின் பதில் அளித்து பேசுவார். தொடர்ந்து பேரவையை தேதி குறிப்பிடாமல் சபாநாயகர் ஒத்திவைப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
சுங்கச்சாவடி கட்டண உயர்வு குறித்து பேரவையில் இன்று பேசுவேன்- அமைச்சர் எ.வ.வேலு பேட்டி
கொளத்தூர் பெரியார் அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் பற்றியும், மருத்துவமனை செயல்பாடுகளையும் அமைச்சர் எ.வ.வேலு நேற்று திடீரென ஆய்வு செய்தார். அப்போது, பொதுமக்கள் மற்றும் நோயாளிகளிடம் கருத்துகளை கேட்டறிந்தார். பின்னர் நிருபர்களை சந்தித்த அமைச்சர் எ.வ.வேலு கூறுகையில், ‘‘சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு குறித்து சட்டமன்றத்தில் நாளை (இன்று) பேசுவேன்’’ என்று தெரிவித்தார்.
The post 3 நாட்கள் விடுமுறைக்கு பிறகு தமிழ்நாடு சட்டப்பேரவை மீண்டும் இன்று கூடுகிறது: நெடுஞ்சாலை, பொதுப்பணித்துறை மானிய கோரிக்கை மீது விவாதம் appeared first on Dinakaran.