சென்னை: தமிழகத்தில் சென்னை – செங்கல்பட்டு – திண்டிவனம் – விழுப்புரம் வழித்தடம் உள்பட 3 வழித்தடங்களில் அதிவேக ரயில் போக்குவரத்துக்காக (மண்டல விரைவு போக்குவரத்து அமைப்புக்காக) விரிவான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்க, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தரப்பில் ஒப்பந்தப்புள்ளி வெளியிடப்பட்டுள்ளது.
தமிழக அரசின் 2025-26-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில், தமிழகத்தில் 3 வழித்தடங்களில் 160 கி.மீ. வேகத்தில் இயங்கும் அதிவேக ரயில் சேவைக்காக விரிவான சாத்தியக்கூறு ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டது. குறிப்பாக, சென்னை – செங்கல்பட்டு – திண்டிவனம் – விழுப்புரம் வரை 167 கி.மீ. தொலைவுக்கும், சென்னை – காஞ்சிபுரம் – வேலூர் வரை 140 கி.மீ. தொலைவுக்கும், கோவை – திருப்பூர் – ஈரோடு – சேலம் வரை 185 கி.மீ தொலைவுக்கும் வழித்தடங்கள் உருவாக்க , தேவையான விரிவான சாத்தியக்கூறு ஆய்வுகள் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தால் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.