நாகப்பட்டினம்: நாகையில் தனியார் கல்லூரி விடுதியில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 3.25 டன் ரேஷன் உணவு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக பாஜ பிரமுகரின் உறவினரான பெண் தாளாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. நாகப்பட்டினத்தில் உள்ள ரேஷன் கடைகளில் இருந்து தனியார் கல்லூரிகளுக்கு ரேஷன் பொருட்களான அரிசி, கோதுமை, பருப்பு, பாமாயில் கடத்தப்படுவதாக குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.
அதன் பேரில் போலீசார் பல்வேறு இடங்களில் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டனர். நாகப்பட்டினம் மாவட்டம் அக்கரைப்பேட்டை அருகே கீச்சாங்குப்பம் சேவாபாரதி நகர் மீனவர் நியாய விலைக்கடை இருந்த பகுதியில் நேற்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டபோது, அந்த ரேஷன் கடை முன்பு மினிலோடு லாரியில் ஒருவர் ரேஷன் அரிசி மூட்டை ஏற்றிக்கொண்டிருந்தது தெரிய வந்தது. சந்தேகம் அடைந்த போலீசார், மினிலோடு லாரியுடன் அந்த நபரை சுற்றி வளைத்தனர்.
லாரி டிரைவர் மற்றும் ரேஷன் கடை ஊழியர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், நாகப்பட்டினத்தில் உள்ள ரேஷன் கடைகளில் அரிசி, கோதுமை, பாமாயில் ஆகியவற்றை வாங்கி லாரியில் கடத்தி சென்று தனியார் கல்லூரி ஒன்றிற்கு கொடுப்பது தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார், தலா 50 கிலோ எடை கொண்ட 25 அரிசி மூட்டைகள், மினிலோடு லாரியை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை போலீசார் கூறுகையில், மினிலோடு லாரி டிரைவர் சுந்தர் (45), ரேஷன் கடை விற்பனையாளர் ராவணன் (50) ஆகியோர் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.
இதில் இவர்கள் கொடுத்த தகவலின் பேரில் சம்பந்தப்பட்ட தனியார் கல்லூரியில் சோதனை நடத்த சென்ற போது கல்லூரி பெண் தாளாளர் தலைமறைவாகி விட்டார். பின்னர் கல்லூரியில் நடத்திய சோதனையில், 50 கிலோ எடை கொண்ட 30 அரிசி மூட்டைகள், 8 கோதுமை மூட்டைகள், 3 பருப்பு மூட்டைகள் பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து மொத்தம் 55 மூட்டைகளில் 2,700 கிலோ அரிசி, 8 மூட்டைகளில் 400 கிலோ கோதுமை, 3 மூட்டைகளில் 150 கிலோ பருப்பு ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
விடுதியில் தங்கி படிக்கும் மாணவிகளுக்கு உணவு தயார் செய்து வழங்க கடந்த 6 மாதமாக ரேஷன் கடைகளில் குறைவான விலைக்கு பொருட்கள் வாங்கி வந்தது தெரியவந்தது. இந்த கல்லூரி, பாஜ முன்னாள் மாவட்ட தலைவர் கார்த்திகேயன் சகோதரர் நடராஜன் என்பவருக்கு சொந்தமானதாகும். தலைமறைவான நடராஜன் மனைவியும், கல்லூரி தாளாளருமான தமிழ்செல்வி, தப்பி ஓடிய ரேஷன் கடை உதவியாளர் ஆறுமுகம் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்றனர்.
The post 3.25 டன் ரேஷன் பொருட்களை கடத்திய பாஜ பிரமுகர் உறவினர்: கல்லூரி விடுதியில் பதுக்கி மாணவிகளுக்கு உணவு விநியோகம் appeared first on Dinakaran.