சென்னை: விளையாட்டு வீரர்களுக்கு 3 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் இந்த ஆண்டு 100 வீரர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் துணை முதல்வர் உதயநிதி தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் சிந்தனை செல்வன் எம்.எல்.ஏ, விளையாட்டு வீரர்கள் மற்றும் மாற்றுத் திறனாளி விளையாட்டு வீரர்களுக்கான பணி நியமனம் தொடர்பாக எழுப்பிய கேள்விகளுக்கு துணை முதல்வர் உதயநிதி பதிலளித்து பேசியதாவது: கடந்த ஆண்டு சட்டப்பேரவையில், மாற்றுத் திறனாளி வீரர்கள் உட்பட 100 விளையாட்டு வீரர்களுக்கு வேலைவாய்ப்பில் 3 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் என அறிவித்திருந்தேன். அதன்படி கடந்த ஆண்டு அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் 104 வீரர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.