சுரின்: உலகின் பிரபலமான சுற்றுலாதலமாக அறியப்படும் தாய்லாந்துக்கும், தொன்மையான மத வழிபாட்டுத்தலங்களை கொண்ட அண்டை நாடான கம்போடியாவுக்கும் இடையே கடந்த 3 நாட்களாக அறிவிக்கப்படாத போர் நடந்து வருகிறது. இரு நாட்டு ராணுவமும் எல்லையில் ராணுவ நிலைகளை குறிவைத்து குண்டுமழை பொழிந்து வருகிறது. இரு நாட்டு ராணுவ வீரர்களும் நேரடி துப்பாக்கி சண்டையில் ஈடுபட்டுள்ளனர். பீரங்கிகள், போர் விமானங்கள் மூலம் குண்டுகள் வீசப்பட்டு வருகிறது.
சர்வதேச ஒப்பந்தத்தை மீறி தாய்லாந்து கொத்து குண்டுகளை பயன்படுத்தி தாக்குதல் நடத்துவதாக கம்போடியா குற்றம்சாட்டுகிறது. அதே சமயம் போர் விதிமுறைகளை மீறி மருத்துவமனை மற்றும் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் நீண்ட தூர ராக்கெட்களை ஏவி கம்போடியா தாக்குதல் நடத்துவதாக தாய்லாந்து குற்றம்சாட்டுகிறது. போர் நீடிப்பதால், கம்போடியாவின் வடக்கு எல்லையில் இருந்து சுமார் 20,000 மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
தாய்லாந்தின் எல்லைப் பகுதியில் இருந்து 1.38 லட்சம் பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். சுமார் 300 தற்காலிக தங்குமிடங்கள் திறக்கப்பட்டுள்ளன. எல்லையை ஒட்டி உள்ள 8 மாவட்டங்களில் ராணுவ சட்டத்தை தாய்லாந்து அமல்படுத்தி இருக்கிறது. சுற்றுலாவை நம்பி உள்ள இரு நாடுகளுக்கும் இடையே இப்படியான போர் ஏன் ஏற்பட்டது? அதற்கான பின்னணி என்ன? இந்த மோதல் சமீபத்திய பிரச்னைக்கானது அல்ல. நூறு ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கும் மோதல் இது.
1000 ஆண்டுகள் முந்தைய வரலாற்றுடன் இணைக்கப்பட்டுள்ளது. சோழ பேரரசுகள் கட்டிய சிவன் கோயில்களுக்கு சொந்தம் கொண்டாடியே தாய்லாந்தும், கம்போடியாவும் மோதிக் கொண்டிருக்கின்றன. தாய்லாந்து-கம்போடியா நாடுகளின் எல்லையில் சுமார் 1000 ஆண்டுகள் பழமையான பிரே விஹார் மற்றும் தா முயென் தாம் ஆகிய இரு இந்து கோயில்கள் அமைந்துள்ளன. இக்கோயில்களும் அதனை சுற்றிய நிலப்பரப்புகளும் தான் தாய்லாந்து-கம்போடியா எல்லைப் பிரச்னையின் மையமாக உள்ளன.
பிரே விஹார் கோயில் கம்போடியாவின் டாங்க்ரெக் மலைகளில் 525 மீட்டர் உயரமுள்ள குன்றின் மீது அமைந்துள்ளது. இந்த சிவன் கோயில், கெமர் பேரரசின் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டது. கெமர் பேரரசு சோழ வம்சத்தின் தொடர்புகளை கொண்டது. 9ம் நூற்றாண்டில் தென் தமிழக பாண்டியர்கள் வழி வந்த சென்சுலா பேரரசு அகற்றப்பட்டு, கெமர் ஆட்சி தொடங்கப்பட்டது.
இதே போல, தாய்லாந்தின் சுரின் மாகாணத்தில் உள்ள தா முயென் தாம் கோயில் 12ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட சிவன் கோயிலாகும். கடந்த 1863-1953ம் ஆண்டு காலத்தில் பிரெஞ்ச் காலனித்துவ ஆட்சியில் கம்போடியா கைப்பற்றப்பட்டது. அப்போது 1907ம் ஆண்டு கம்போடியா-தாய்லாந்து எல்லையை வரையறுக்கும் வரைபடம் வெளியிடப்பட்டது. முதலில் இதை ஏற்றுக் கொண்ட தாய்லாந்து, பின்னர் பிரே விஹார் இந்து கோயில்கள் கம்போடியா எல்லையில் இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தது.
கடந்த 1959ம் ஆண்டு சர்வதேச நீதிமன்றத்தை கம்போடியா நாடியது. அதில் கம்போடியாவுக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது. மேலும், 2008ம் ஆண்டு உலக பாரம்பரிய சின்னமாக பிரே விஹார் கோயிலை யுனெஸ்கோ அறிவித்தது. கம்போடியாவின் இந்த நடவடிக்கைக்கும் தாய்லாந்து கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தது. இந்த பிரச்னை காரணமாக அவ்வப்போது இரு நாடுகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு உயிர் பலிகள் நடப்பது வாடிக்கையாக உள்ளது. ஆனால் இதுவரை நடந்த அத்தனை மோதல்களும் மிகக் குறுகிய நாட்களில் முடிவுக்கு வந்துள்ளன.
கடந்த 2011ல் இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதலுக்குப் பிறகு சர்வதேச நீதிமன்றம் கடந்த 2013ல் வழங்கிய தீர்ப்பில் பிரே விஹார் கோயில் மட்டுமின்றி அதனை சுற்றியுள்ள பகுதியின் மீதும் கம்போடியாவுக்கு இறையாண்மையை உறுதி செய்தது. அதோடு, அங்கிருந்து தாய்லாந்தை தனது படைகளை அகற்றுமாறு அறிவுறுத்தியது.
சமீபத்தில், தாய்லாந்தில் உள்ள பிரசாத் தா முயென் தாம் கோயிலுக்குள் கம்போடியா படையினர் அத்துமீறி நுழைந்து தேசிய கீதத்தை பாடியதாக எழுந்த குற்றச்சாட்டால் மீண்டும் சண்டை ஏற்பட்டுள்ளது. மேலும் கடந்த மே மாதம் தாய்லாந்து ராணுவத்துடனான சண்டையில் கம்போடியா ராணுவ வீரர் ஒருவர் கொல்லப்பட்டார்.
இதன் தொடர்ச்சியாக இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் அறிவிக்கப்படாத போர் மூண்டுள்ளது. இந்த மோதல் காரணமாக இரு நாடுகளின் எல்லைகளும் மூடப்பட்டுள்ளன. இரு நாட்டு எல்லைப் பகுதியில் வணிகம் துண்டிக்கப்பட்டுள்ளது. இது இரு நாட்டு எல்லையிலும் பதற்றமான சூழலை உருவாக்கி உள்ளது.
* உடனடி போர் நிறுத்தம்
தாய்லாந்தும், கம்போடியாவும் 817 கிமீ எல்லையை பகிர்ந்து கொள்கின்றன. இதில் பல இடங்களில் இருநாடுகளுக்கும் இடையே மோதல் இருந்து வருகிறது. ஆனாலும், இந்த எல்லை பிரச்னையை பேசித் தீர்த்துக் கொள்ள தயாராக இருப்பதாக இரு நாடுகளும் கூறி உள்ளன. தற்போதைய மோதலை கவனமாக கையாண்டு, சர்வதேச சட்டத்திற்கு உட்பட்டு தீர்வு காண வேண்டும் என தாய்லாந்தின் இடைக்கால பிரதமர் பும்தம் வெச்சயாச்சை கூறி உள்ளார்.
இந்த பிரச்னையை அமைதியாக தீர்க்கவே கம்போடியா விரும்புவதாகவும், உடனடி போர் நிறுத்தம் தேவை என்றும் ஐநாவுக்கான கம்போடியா தூதர் வலியுறுத்தி உள்ளார். தாய்லாந்து-கம்போடியா விவகாரம் தொடர்பாக ஐநா பாதுகாப்பு கவுன்சிலும் அவசர கூட்டத்தை கூட்டி விவாதித்துள்ளது. இரு நாடுகளும் உடனடியாக சண்டையை கைவிட வேண்டுமென மலேசியா உள்ளிட்ட ஆசியான் நாடுகள் வலியுறுத்தி உள்ளன.
* இந்தியர்களுக்கு எச்சரிக்கை
தாய்லாந்து, கம்போடியா இடையே மோதல் நடந்து வரும் நிலையில், கம்போடியாவில் வசிக்கும் இந்தியர்கள் எல்லை பகுதிகளுக்கு பயணிக்க வேண்டாம் என அங்குள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தி உள்ளது. மேலும், தூதரகத்தை தொடர்பு கொள்ள அவசரகால உதவி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. இதே போல, தாய்லாந்தில் உள்ள இந்திய தூதரகமும் இந்தியர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
* 3 நாளில் 51 பேர் பலி
கடந்த 3 நாளாக நீடிக்கும் இப்போரில் இதுவரை தாய்லாந்து தரப்பில் 6 ராணுவ வீரர்களும் 13 பொதுமக்களும் பலியானதாக கூறப்படுகிறது. 29 ராணுவ வீரர்கள், 30 பொதுமக்கள் காயமடைந்துள்ளனர். கம்போடியா தரப்பில் நேற்று 12 பேர் பலியாகி உள்ளனர். 3 நாள் சண்டையில் மொத்தம் 32 பேர் பலியாகி உள்ளனர். கடைசியாக 2011ல் நடந்த சண்டையில் இரு தரப்பிலும் 20 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.
* 97% பேர் புத்த மதத்தினர்
கெமர் பேரரசின் புகழ்பெற்ற அரசனான முதலாம் சூரியவர்மன் காலத்தில் கட்டப்பட்ட கோயில்தான் பிரே விஹார். இந்த கோயிலின் சுவர்களில் ராமாயண, மகாபாரத இதிகாச கதைகளின் நிகழ்வுகள் கொண்ட சிலைகள் இடம் பெற்றுள்ளன. கம்போடியாவில் புத்தமதம் வலுப்பெற்றாலும், இன்னமும் பல இந்து மத சடங்குகள் அங்கு பின்பற்றப்பட்டு வருகின்றன. அங்குள்ள மக்கள் தொகையில் 97 சதவீதம் பேர் புத்த மதத்தை தழுவியர்கள்.
The post 3 நாட்களாக நடக்கும் ஓயாத போர் சோழர் காலத்து சிவன் கோயிலுக்காக மோதும் தாய்லாந்து-கம்போடியா: எல்லையில் இருந்து 1.5 லட்சம் மக்கள் வெளியேற்றம் appeared first on Dinakaran.