டெல் அவிவ்: மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்தது. 15 மாதங்களாக நடந்துவந்த போர் முடிவுக்கு வந்துள்ளது. நிபந்தனைகள் இருந்தாலும் கூட இந்தப் போர் நிறுத்த ஒப்பந்தம் பல தரப்பிலும் வரவேற்பைப் பெற்றுள்ளது. முன்னதாக இஸ்ரேல் நேரப்படி இன்று காலை 8.15 மணிக்கே அமலுக்கு வர வேண்டிய போர் நிறுத்தம் சில மணி நேரம் தாமதமானது. இதனால் கடைசி நேர பரபரப்பு கூடியது. திக் திக் நிமிடங்களைக் கடந்து தற்போது போர் நிறுத்தம் காசா மக்களுக்கு நிம்மதியைக் கொண்டு சேர்த்துள்ளது.
தாமதம் ஏன்? முன்னதாக, ஹமாஸால் விடுவிக்கப்பட வேண்டிய பிணைக் கைதிகளின் பெயர் பட்டியலை அவர்கள் வெளியிடாததால், போர் நிறுத்த ஒப்பந்த அமலை நிறுத்தி வைத்துள்ளதாக இஸ்ரேல் தெரிவித்திருந்தது. தொடர்ந்து தாக்குதல் நடத்துவதாகவும் கூறியிருந்தது. இதனால் பதற்றம் ஏற்பட்டது.