சமயபுரம்: திருவெள்ளறை புண்டரீகாட்ச பெருமாள் கோயிலில் 300ஆண்டுகளுக்கு பிறகு தெப்ப உற்சவம் நேற்றிரவு கோலாகலமாக நடந்தது. திருச்சி மாவட்டம் திருவெள்ளறையில் பிரசித்தி பெற்ற புண்டரீகாட்ச பெருமாள் கோயில் உள்ளது. 108 திவ்ய தேசங்களில் 4வது திவ்ய தேசமாகவும், ரங்கம் ரங்கநாதர் கோயிலின் உபகோயிலாகவும் விளங்கி வருகிறது. மிகவும் பழமை வாய்ந்த இக்கோயிலில் சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு திருவிழா காலங்களில் கோயிலின் தென்புறத்தில் உள்ள குளத்தில் தெப்ப உற்சவம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மீண்டும் தெப்ப உற்சவம் நடைபெற வேண்டும் என்று கோயில் நிர்வாகம் முடிவெடுத்து குளத்தை சீரமைத்தது.
இதையடுத்து கோயிலில் 300 ஆண்டுகளுக்கு பிறகு தெப்ப உற்சவம் நேற்றிரவு கோலாகலமாக நடைபெற்றது. இரவு அனந்தராயர் மண்டபத்தில் பெருமாள்தாயாருக்கு சிறப்பு அலங்காரம் நடந்தது. பின்னர் கேடயத்தில் பெருமாள் எழுந்தருளி கோயிலில் வலம் வந்தார். அதைத்தொடர்ந்து இரவு பெருமாள்தாயார் தெப்பத்தில் எழுந்தருளினர். மேள, தாளங்கள் முழங்க குளத்தில், மின் அலங்காரத்தில் ஜொலித்த தெப்பம் மூன்று முறை வலம் வந்தது. இதில் திருவெள்ளறை மட்டுமின்றி சுற்றுவட்டார கிராமங்களிலிருந்து திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் தெப்பத்திலிருந்து சுவாமி தேரோடும் வீதி வழியாக வலம் வந்து கிழக்கு வாசல் வழியாக கோயிலை சென்றடைந்தது.அங்கு பெருமாள்தாயாருக்கு தீபாராதனை நடைபெற்றது.
The post 300 ஆண்டுகளுக்கு பின் திருவெள்ளறை பெருமாள் கோயிலில் தெப்ப உற்சவம் கோலாகலம் appeared first on Dinakaran.