புதுடெல்லி: இந்தியா கடந்த 2015-ம் ஆண்டு முதல் இதுவரை 34 நாடுகளின் செயற்கைக்கோள்களை ஏவி ரூ.1260 கோடி அந்நிய செலாவணி ஈட்டியுள்ளதாக மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
மக்களவையில் எழுத்துபூர்வமாக அளித்த பதிலில் விண்வெளித்துறையை கவனிக்கும் மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறியதாவது: கடந்த 10 ஆண்டுகளில் 34 நாடுகளின் 393 செயற்கைக்கோள்கள் மற்றும் 3 இந்திய வாடிக்கையாளர்களின் செயற்கைக்கோள்கள் வர்த்தக ரீதியாக இஸ்ரோவின் பிஎஸ்எல்வி, எல்விஎம்3 மற்றும் எஸ்எஸ்எல்வி ராக்கெட்டுகள் மூலம் விண்ணுக்கு அனுப்பப்பட்டுள்ளன. 393 வெளிநாட்டு செயற்கைக்கோள்களில் 232 செயற்கைக்கோள்கள் அமெரிக்காவைச் சேர்ந்தவை. 83 செயற்கைக்கோள்கள் இங்கிலாந்தைச் சேர்ந்தவை. மற்றவை சிங்கப்பூர், கனடா, கொரியா, லக்ஷம்பர்க், இத்தாலி, ஜெர்மனி, பெல்ஜியம், பின்லாந்து, பிரான்ஸ், ஸ்விட்சர்லாந்து, நெதர்லாந்து, ஜப்பான், இஸ்ரேல், ஸ்பெயின், ஆஸ்திரேலியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஆஸ்திரியா நாடுகளைச் சேர்ந்தவை.