பாரிஸ்: தற்போது 35 வயது நடிகையாக இருப்பவர் 12 வயது சிறுமியாக இருக்கும் போது பாலியல் துன்புறுத்தல் கொடுத்த பிரான்ஸ் நடிகருக்கு 4 ஆண்டு சிறை வழங்கி பிரான்ஸ் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ‘மீடூ’ புகாரில் சிக்கிய முதல் வழக்கில் தீர்ப்பாகும். பிரான்ஸ் நாட்டில் வெளியான ‘போர்ட்ரைட் ஆஃப் எ லேடி ஆன் ஃபயர்’ என்ற படத்தில் நடித்த நடிகை அடீல் ஹேனெல் (35), கடந்த 2001ம் ஆண்டில் அதாவது தனது 12 வயதில் ‘தி டெவில்ஸ்’ என்ற திரைப்படத்தில் நடித்தார். அப்போது அவரை பிரான்ஸ் திரைப்பட இயக்குனர் கிறிஸ்டோஃப் ருகியா (அப்போது 36) பாலியல் ரீதியாக சீண்டியுள்ளார். சிறுமியாக இருந்த போது தனக்கு ஏற்பட்ட பாலியல் துன்புறுத்தல் குறித்து கடந்த 2019ல் அடீல் ஹேனேல் பகிங்கரமாக வெளியிட்டார்.
பிரான்ஸ் சினிமாவில் முதன் முறையாக வெளியான முதல் ‘மீடூ’ புகார் இதுவாகும். இவ்விவகாரம் பிரான்சில் பூதாகரமாக வெடித்ததால், இதேபோல் பல பெண்கள் கிறிஸ்டோஃப் ருகியா மீது பாலியல் துன்புறுத்தல் புகார்களை கூறினர். அடீல் ஹேனெலின் புகார் குறித்து பிரான்ஸ் போலீசார் விசாரணை நடத்தினர். அவரிடம் பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில் கிறிஸ்டோஃப் ருகியா மீது சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக வழக்கு பதிவு செய்தனர். ஆனால் கிறிஸ்டோஃப் ருகியா தனக்கு எதிராக கூறப்படும் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளை மறுத்தார். ஒரு கட்டத்தில் அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஆனால் அவர் சிறையில் இருந்து தப்பினார். பின்னர் அவரை தேடி பிடித்து போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில் பாரிஸ் நீதிமன்றம் தற்போது கிறிஸ்டோஃப் ருகியா மீது கூறப்பட்ட பாலியல் துன்புறுத்தல் தொடர்பான வழக்கிற்கு தீர்ப்பளித்துள்ளது. அந்த தீர்ப்பில், குற்றம்சாட்டப்பட்ட கிறிஸ்டோஃப் ருகியாவுக்கு நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இதுகுறித்து கிறிஸ்டோஃப் ருகியாவின் வழக்கறிஞர் ஃபேன்னி கொலின் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘எனது கட்சிக்காரர் கிறிஸ்டோஃப் ருகியா குற்றமற்றவர்; இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்’ என்றார்.
The post 35 வயது நடிகை 12 வயது சிறுமியாக இருக்கும் போது பாலியல் துன்புறுத்தல் கொடுத்த பிரான்ஸ் நடிகருக்கு 4 ஆண்டு சிறை appeared first on Dinakaran.