புதுடெல்லி: இந்தியா வந்துள்ள அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் நேற்று பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினார். அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் 4 நாள் அரசு முறை பயணமாக நேற்று டெல்லி வந்தடைந்தார். அவருடன் மனைவியும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான உஷா வான்ஸ், 3 குழந்தைகள் வந்துள்ளனர்.
டெல்லி பாலம் விமான நிலையம் வந்தடைந்த வான்ஸை மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வரவேற்றார். துணை அதிபரான பிறகு முதல் முறையாக இந்தியா வந்துள்ள வான்ஸுக்கு முப்படை அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. பின்னர் டெல்லியில் உள்ள சுவாமி நாராயணன் அக்சர்தாம் கோயிலுக்கு வான்ஸ் குடும்பத்தினர் சென்றனர். பின்னர் மத்திய குடிசைத் தொழில்கள் மையத்துக்கு சென்றனர்.