இந்த நூற்றாண்டின் ஆகப்பெரும் துயர் கரோனா. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சகட்டுமேனிக்கு ஈவிரக்கமின்றி காவு வாங்கிச் சென்ற அந்த பெருந்தொற்று தந்துசென்ற வலியை இன்னமும் கூட பல குடும்பங்கள் அனுபவித்து வருகின்றன. பெருந்தொற்றின் பேரழிவில் பெற்றோரை இழந்த குழந்தைகள் எந்தவிதத்திலும் பாதித்துவிடக் கூடாது என்பதற்காக மத்திய – மாநில அரசுகள் பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்தன.
தாயையும் தந்தையையும் கரோனாவுக்கு பறிகொடுத்த பிள்ளைகளுக்கு மத்திய அரசு ரூ.10 லட்சமும், மாநில அரசு ரூ.5 லட்சமும் நிவாரணம் அறிவித்தன. தாய் அல்லது தந்தையை இழந்த பிள்ளைகளுக்கு ரூ.3 லட்சத்தை நிவாரணமாக அறிவித்த மாநில அரசு, கரோனாவால் பெற்றோரை இழந்த பிள்ளைகளின் கல்லூரி வரையிலான படிப்புச் செலவுகளையும் ஏற்பதாக உத்தரவாதம்தந்தது. ஆனால், இதெல்லாம் சொன்னபடி நடந்ததா என்றால் இல்லை என்கிறார்கள்.