சென்னை: திமுக அரசின் 4 ஆண்டு ஆட்சியில் சென்னை மாநகராட்சி பூங்காக்களின் எண்ணிக்கை 908 ஆக உயர்ந்துள்ளதாக சட்டப்பேரவையில் அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் இன்று (ஏப்.17) கேள்வி நேரத்தின்போது, தியாகராயநகர் தொகுதி எம்.எல்.ஏ. ஜெ.கருணாநிதி எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதிலளித்து பேசியது: “சென்னை வடபழனியில் உள்ள மாநகராட்சி பூங்காவை தியாகராய நகர் தொகுதி எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.75 லட்சத்தில் சீரமைக்கப்பட்டு வருகிறது. அதன்படி, குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் கபடி, கிரிக்கெட், கைப்பந்து மற்றும் பூப்பந்து விளையாட்டு விளையாடும் பகுதிகள், யோகா, உடற்பயிற்சி செய்வதற்கும், சிறுவர் விளையாட்டு பகுதி, பூச்செடிகள், நடைபாதைகள் மற்றும் 2 கழிவறைகள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப்பணிகள் அனைத்தும் ஏப்ரல் மாதத்துக்குள் முடிக்கப்படும்.