சென்னை: “திமுக ஆட்சிக்கு வந்த பிறகு அரசுப் பணியிடங்கள் நிரப்பப்படுவதில்லை என்பது மட்டுமின்றி, எல்லா பணியிடங்களிலும் ஒப்பந்த முறையிலும், குத்தகை அடிப்படையிலும் தான் பணியாளர்கள் நியமிக்கப்படுகின்றனர். அத்தகைய நியமனங்களில் இட ஒதுக்கீட்டு முறை பின்பற்றப்படுவதில்லை. அதனால், தமிழகத்தில் 69% இட ஒதுக்கீடு கடைபிடிக்கப்படுகிறது என்று பெருமிதம் கொள்வதில்லை எந்த அர்த்தமும் இல்லை” என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சாடியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “தமிழகத்தில் அரசுத்துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள பணியிடங்களின் எண்ணிக்கை 6.50 லட்சமாக அதிகரித்திருப்பதாக அரசு ஊழியர் அமைப்புகள் தெரிவித்திருக்கின்றன. மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு படுதோல்வி அடைந்திருக்கிறது என்பதற்கு இதை விட பெரிய சான்று எதுவும் தேவையில்லை. அரசுப் பணியிடங்களை நிரப்ப திமுக அரசு தவறியது கண்டிக்கத்தக்கது.