கான் யூனிஸ்: ஹமாஸ்-இஸ்ரேல் இடையே கடந்த 15 மாதங்களுக்கும் மேலாக போர் நீடித்த நிலையில் கடந்த மாதம் போர் நிறுத்த ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து முதல் கட்ட போர் நிறுத்தம் அமலில் உள்ளது. இதன் அடிப்படையில் பிணை கைதிகள் மற்றும் பாலஸ்தீனிய கைதிகள் விடுவிக்கப்பட்டு வருகின்றனர். சமீபத்திய நாட்களில் 24 பிணை கைதிகளை ஹமாஸ் விடுவித்தது. இந்நிலையில் நேற்று ஹமாஸ் சிறைப்பிடிக்கப்பட்டபோது இறந்த ஒரு பெண், அவரது இரண்டு குழந்தைகள் உட்பட 4 பேரின் உடல்களை நேற்று ஒப்படைத்தது. உயிரிழந்தவர்கள் ஷிரி பிபாஸ், அவரது இரண்டு குழந்தைகளான ஏரியல் மற்றும் கிபீர் என்று கூறப்படுகின்றது.
மேலும் 83வயதான ஓடெட் லிப்ஷிட்ஸ் என்பவரும் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது. இஸ்ரேல் வான்வழித்தாக்குதலின்போது 4 பேரும் கொல்லப்பட்டதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது. ஷிரி பிபாசின் கணவர் யார்டன் இந்த மாதம் விடுவிக்கப்பட்டார். ஹமாஸ் மற்றும் பல்வேறு பிரிவுகளை சேர்ந்த முககவசம் அணிந்த மற்றும் ஆயுதம் ஏந்தியவர்கள் உட்பட ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தெற்கு காசாவின் கான் யூனிசில் சவப்பெட்டிகளை ஒப்படைக்கும் இடத்தில் கூடியிருந்தனர். இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை காட்டேரி போன்று சித்தரித்து பெரிய பதாகைகளுடன் 4 சவப்பெட்டிகள் வைக்கப்பட்டு இருந்தது. பின்னர் செஞ்சிலுவை சங்க வாகனத்தில் சவபெட்டிகள் இஸ்ரேலுக்கு எடுத்து செல்லப்பட்டன.
The post 4 இஸ்ரேலிய பிணை கைதிகளின் உடல்களை ஒப்படைத்தது ஹமாஸ் appeared first on Dinakaran.