ஜெருசலேம்: காசாவில் 15 மாதங்களாக நீடித்து வரும் போரை முடிவுக்கு கொண்டுவர ஹமாஸ் -இஸ்ரேல் இடையே ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில், இந்த போர் நிறுத்த ஒப்பந்தம் நாளை முதல் அமலுக்கு வருகிறது. டிரம்ப் கொடுத்த எச்சரிக்கையில் இந்த போர் நிறுத்த ஒப்பந்தம் முடிவுக்கு வந்துள்ளது.
மேற்காசிய நாடான பாலஸ்தீனத்தின் காசா பகுதியை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் தீவிரவாதிகள் கடந்த 2023 அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து திடீர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,200 இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்தவர்கள் உயிரிழந்தனர். சுமார் 250க்கும் மேற்பட்டோரை பிணைக் கைதிகளாக ஹமாஸ் தீவிரவாதிகள் பிடித்துச் சென்றனர். இதற்கு பதிலடியாக காசா மீது இஸ்ரேல் ராணுவ தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட 15 மாதங்களாக நடத்திய தொடர் தாக்குதலில் (இன்றுடன் 470 நாட்கள்) காசாவில் ஆயிரக்கணக்கான பெண்கள், குழந்தைகள் உட்பட இதுவரை 46,700க்கும் மேற்பட்டோர் பலியாகினர். மேலும் ஆயிரக்கணக்கானோர் அங்கிருந்து வெளியேறி தற்காலிக முகாம்களில் தங்கியுள்ளனர். காசா போரில் ஹமாஸ் தீவிரவாதிகள் 17,000 பேரை இஸ்ரேல் கொன்றுள்ளது.
இதற்கிடையில் இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான போரை முடிவுக்கு கொண்டுவர எகிப்து, கத்தார் ஆகிய நாடுகள் தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வந்தன. இதற்கு அமெரிக்கா ஆதரவு அளித்து வந்தது. அதன் தொடர்ச்சியாக பாலஸ்தீன சிறைக் கைதிகளுக்கு பதிலாக இஸ்ரேலிய பிணைக் கைதிகளை விடுவிக்கவும், காசாவில் சண்டை நிறுத்தம் மேற்கொள்ளவும் இஸ்ரேல் – ஹமாஸ் இடையே தோஹாவில் நடந்த பேச்சுவார்த்தையின் மூலம் போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது. கத்தார் பிரதமர் முகமது பின் அப்துல்ரஹ்மான் பின் ஜாசிம் அல் தானி முன்னிலையில் போர் நிறுத்த அறிவிப்பு வெளியானது. அமெரிக்காவின் புதிய அதிபராக டொனால்டு டிரம்ப் வரும் 20ம் தேதி (நாளை மறுநாள்) பதவியேற்க உள்ளார். முன்னாக அவர் வெளியிட்ட அறிவிப்பில், தான் பதவியேற்று 2 வாரங்களுக்குள் பிணைக் கைதிகள் விடுவிக்கப்படவில்லை எனில் ஹமாஸ் தீவிரவாதிகள் மோசமாக விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இதையடுத்து மத்திய கிழக்கு நாடுகளுக்கான அவரது தூதர் ஸ்டீவ் விட்ஃகாப், ஹமாஸ் – இஸ்ரேல் இடையே ஒப்பந்தம் ஏற்பட தற்போதைய அதிபர் ஜோ பைடன் குழுவினருடன் இணைந்து பணியாற்றி வந்தார். இந்நிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதுகுறித்து ட்ரம்ப் வெளியிட்டுள்ள பதிவில், ‘மத்திய கிழக்கில் பிணைக் கைதிகளை விடுவிக்க ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இவர்கள் விரைவில் விடுவிக்கப்படுவார்கள். நன்றி!’ என்று கூறியுள்ளார். ஹமாஸ் -இஸ்ரேல் இடையே ஏற்பட்டுள்ள போர் நிறுத்த ஒப்பந்தத்தை இந்தியா உள்ளிட்ட நாடுகள் வரவேற்றுள்ளன. முன்னதாக போர் நிறுத்தம் மற்றும் பிணையக்கைதிகளை விடுவிக்கும் ஒப்பந்தத்திற்கு இஸ்ரேலின் அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. அதனால் ஹமாஸுடனான போர் நிறுத்தம் நாளை (ஜன. 19) முதல் நடைமுறைக்கு வரும் என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அறிவித்துள்ளார்.
இருப்பினும், நெதன்யாகுவின் அமைச்சரவையில் இருக்கும் 24 அமைச்சர்கள் இந்த ஒப்பந்தத்திற்கு ஆதரவாக வாக்களித்ததாகவும், எட்டு பேர் இந்த ஒப்பந்தத்தை எதிர்த்ததாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. ேபார் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வரவுள்ளதால், காசா பகுதியை தனது கட்டுக்குள் கொண்டு வரும் முழு பொறுப்புகளையும் ஏற்கத் தயாராக இருப்பதாக பாலஸ்தீன ஆணையம் அறிவித்துள்ளது. கடந்த 2023 அக்டோபர் 7ம் தேதி ஹமாஸ் மீதான இஸ்ரேல் தாக்குதலில் 46,876 பேர் கொல்லப்பட்டனர்; 1,10,642 பேர் காயமடைந்தனர். அதேநேரம் இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலால் அக். 7ம் தேதி மட்டும் 1,139 பேர் கொல்லப்பட்டனர்; 200க்கும் மேற்பட்டோர் சிறைபிடிக்கப்பட்டனர்; பாதிக்கும் மேற்பட்டோர் விடுவிக்கப்பட்ட நிலையில், போர் நிறுத்த ஒப்பந்தத்தின் மூலம் மீதமுள்ள 93 பேர் நாளை விடுவிக்கப்படுவார்கள் என்றும், அதேநேரம் இஸ்ரேல் பிடியில் இருக்கும் 700க்கும் மேற்பட்ட கைதிகள் விடுவிக்கப்பட வாய்ப்புள்ளதாக செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
மொத்தமாக இரு தரப்பிலும் கடந்த 15 மாதங்களாக நடந்த போரால் 50,000 பேர் பலியாகி இருக்கு வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
டிரம்பின் அதிரடி என்னவாக இருக்கும்?
டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவின் அடுத்த அதிபராக பதவியேற்க உள்ள நிலையில், அவர் பொறுப்பேற்ற முதல் நாளிலிருந்தே மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்கா மட்டுமின்றி சர்வதேச அரசியலிலும் நிறைய மாற்றங்கள் நடைபெற வாய்ப்புள்ளது. அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறியவர்களை அவர்களது சொந்த நாட்டிற்கு அனுப்பி வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2022ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, அமெரிக்காவில் சுமார் 1.10 கோடி பேர் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இவர்களில் 7.25 லட்சம் பேர் இந்தியர்கள் ஆவர். எனவே அவர்கள் அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்படலாம்.
அமெரிக்காவில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் பிறப்புரிமை உண்டு. ஆனால் பிறப்புரிமை – குடியுரிமை கொள்கையை முடிவுக்கு கொண்டுவருவதாக டிரம்ப் ஏற்கனவே அறிவித்தார். அதனால் குடியுரிமை இல்லாமல் அமெரிக்காவில் குடியேறியவர்களின் குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாக இருக்கும். டிரம்பின் ஆதரவாளர்கள் சிலர் எச்-1 பி விசாக்களுக்கான கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளனர். ஒருவேளை அவ்வாறு நடந்தால், அமெரிக்காவில் குடியேற விரும்பும் இந்தியர்களுக்கு பெரும் நன்மையாக இருக்கும். இருப்பினும், டிரம்ப் ஆதரவாளர்கள் சிலர் இந்த யோசனையை எதிர்க்கின்றனர்.
டிரம்ப் தான் பதவியேற்ற 24 மணி நேரத்திற்குள் உக்ரைனில் போரை முடிவுக்கு கொண்டுவருவதாக உறுதியளித்துள்ளார். போருக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான வழிகள் குறித்து விவாதிக்க விரைவில் புடினை சந்திப்பதாகவும் டிரம்ப் கூறினார். டிரம்பின் வாக்குறுதிபடி உக்ரைன் போர் முடிவுக்கு வந்தால், உலகில் பதற்றம் குறையும். மேலும் உக்ரைனுக்கு ஆயுதங்களை சப்ளை செய்வதற்கான அமெரிக்காவின் சுமை குறைக்கப்படும்.
தான் அதிபராக தேர்வு செய்யப்பட்டால், மற்ற நாடுகளுக்கு எதிராக அதிரடி வரியை விதிக்கப்போவதாக டிரம்ப் பலமுறை அச்சுறுத்தியுள்ளார். தங்கள் பொருட்களுக்கு அதிக வரி விதிக்கும் நாடுகளுக்கு கூடுதல் வரி விதிக்கப்படும் என்றும் அவர் கூறினார். இவரது அறிவிப்பை செயல்படுத்தினால், இந்தியா உள்ளிட்ட நாடுகளின் ஏற்றுமதியில் தாக்கத்தை ஏற்படுத்தும். டிரம்ப்பின் பொருளாதாரக் கொள்கைகள், அவர் அதிபராக பொறுப்பேற்பார் என்று கூறுகின்றனர். அமெரிக்க டாலரை வலுப்படுத்தும் வகையில் கொள்கை முடிவுகளை எடுப்பார் என்பதால், மற்ற நாடுகளில் பணவீக்கம் அதிகரிக்கும் என்று பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர். இதன் தாக்கம் இந்தியாவிலும் நடக்கலாம் என்றும் கூறுகின்றனர்.
வரும் 2030ம் ஆண்டுக்குள் அமெரிக்காவில் விற்கப்படும் அனைத்து புதிய வகை கார்கள் மற்றும் டிரக்குகளில் 50 சதவீதம் மின்சாரமாக இருக்க வேண்டும் என்ற ஜோ பிடன் நிர்வாகத்தின் கொள்கை முடிவை முடிவுக்கு கொண்டுவருவதாக டிரம்ப் உறுதியளித்துள்ளார். இந்த முடிவு மாசுபாட்டைக் குறைப்பதற்கான உலகளாவிய முயற்சிகளுக்கு பின்னடைவாக இருக்கலாம் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகின்றனர். அமெரிக்காவில் எண்ணெய் உற்பத்தியை அதிகரிப்பதாகவும் டிரம்ப் உறுதியளித்தார். இதனை நடைமுறைப்படுத்தினால், உலகளாவிய எண்ணெய் தேவையைக் குறைக்கும் என்றும், அதன் விலையும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வாஷிங்டன் டி.சி-யில் பதவியேற்பு விழா
அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப் நாளை மறுநாள் (ஜன. 20) பதவியேற்க உள்ளார். இதுகுறித்து டிரம்ப் வெளியிட்ட பதிவில், ‘கடுமையான குளிர் சூழலால் எனது பதவியேற்பு விழா திறந்த வெளியில் நடத்தப்படாமல் அமெரிக்க கேபிட்டலுக்கு (வாஷிங்டன்) உள்ளேயே நடைபெறும். ஆர்க்டிக் புயல் உருவாகி வருகிறது. இந்த நேரத்தில் மக்கள் பாதிக்கப்படுவதை விரும்பவில்லை. எனவே, எனது பதவியேற்பு நிகழ்வை அமெரிக்க கேபிட்டலில் நடத்த உத்தரவிட்டுள்ளேன்’ என்று தெரிவித்துள்ளார். முன்னதாக இதேபோன்ற குளிர் காலத்தில் அமெரிக்க முன்னாள் குடியரசுக் கட்சியின் தலைவரான ரொனால்ட் ரீகன் இரண்டாவது அதிபராக கடந்த 1985ம் ஆண்டு பதவியேற்றார். கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு பின்னர், டிரம்பின் பதவியேற்பு விழா கேபிட்டல் ஒன் அரங்கிற்குள் நடக்கிறது. சுமார் 20,000 பேர் அமரக்கூடிய வாஷிங்டன் டி.சி நகரத்தில் அமைந்துள்ள விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது. அமெரிக்க அதிபர் டிரம்பின் பதவியேற்பு விழாவில், அமெரிக்க முன்னாள் அதிபர்கள், அவர்களது மனைவிகள், வெளிநாட்டு தலைவர்கள், பிரபலங்கள் உள்ளிட்டோர் மட்டும் கலந்து கொள்கின்றனர்.
The post 470 நாட்களாக நடந்த சண்டை; 50,000 பேர் பலி: இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்தம் நாளை அமல் appeared first on Dinakaran.