*கலெக்டர் தகவல்
திருச்செங்கோடு : நாமக்கல் மாவட்டத்தில் 5 ஆண்டுகளுக்கு மேல் வசிக்கும் பொதுமக்களுக்கு, வீட்டுமனை பட்டா வழங்க பயனாளிகள் தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாக கலெக்டர் உமா தெரிவித்தார்.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு நகராட்சி, வரகூராம்பட்டி, பட்டேல் நகர் மற்றும் அணிமூர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று கலெக்டர் உமா வளர்ச்சித்திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழக முதல்வர் நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் நீண்ட காலமாக வசித்து வரும் மக்களின் கனவை நனவாக்கும் வகையில், வீட்டுமனை பட்டா வழங்கும் திட்டத்தை செயல்படுத்தியுள்ளார். குறிப்பாக நகர்புற பகுதியில் 5 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வரும் மக்களுக்கு, ஒருமுறை பட்டா வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி உள்ளார்.
இத்திட்டத்தில் 5 ஆண்டுகளுக்கு மேலாக வசிக்கும் மக்கள் குறித்து கணக்கெடுப்பு பணியானது குடும்ப அட்டை, வீட்டுவரி ரசீது, குடிநீர் கட்டண ரசீது, மின் கட்டண ரசீது ஆகியஆவணங்களை அடிப்படையாக கொண்டு நடைபெற்று வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில் சுமார் 1,189 குடியிருப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. அவ்வாறு கண்டறியப்பட்டுள்ள குடியிருப்புகளில் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் தாசில்தார் ஆகியோர் அடங்கிய குழு முதற்கட்டமாக ஆய்வு மேற்கொள்ளும்.
அதனைத் தொடர்ந்து, வருவாய் கோட்டாட்சியர்கள் பயனாளிகளின் ஆவணங்களை ஆய்வு மேற்கொள்ள உள்ளார்கள். பின்னர் மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் கலெக்டர் ஆகியோரால் மேல் ஆய்வு செய்யப்படும். இத்திட்டம் நகர்புறத்தில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மக்கள் பயன்பெறும் வகையில் செயல்படுத்தப்பட்டுள்ளது.
திருச்செங்கோடு நகராட்சி பகுதிகளில் பட்டா வழங்குவது குறித்து கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. முதற்கட்டமாக திருச்செங்கோடு பகுதியில் 52 பட்டாக்கள் வழங்க கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. நேற்றைய தினம் திருச்செங்கோடு நகராட்சி 25வது வார்டு பகுதியில் களஆய்வு பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளது.
நில மதிப்பு குறித்து பத்திர பதிவு அலுவலகத்தில் தரவு பெறப்பட்டு, நில மதிப்பு ₹5 கோடி வரை இருப்பின் மாவட்ட அளவில் பட்டா வழங்கப்படும். விலை உயர்வாக இருப்பின் மாநில குழுவிற்கு அனுப்பப்படும். வீட்டுமனை பட்டா வழங்குவது குறித்து முதல் கலந்தாய்வு கூட்டம் வரும் 28ம்தேதி நடைபெற உள்ளது.
இக்குழுவில் மாவட்ட கலெக்டர், டிஆர்ஓ, 2 ஆர்டிஓ.,க்கள், நில எடுப்பு தனி டிஆர்ஓ (சிப்காட்) உள்ளிட்டவர்கள் இடம் பெறுவார்கள். முதற்கட்டமாக திருச்செங்கோடு பகுதியில் பயனாளிகளுக்கு பட்டா வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இத்திட்டத்தின் கீழ் கள ஆய்வு பணிகள் முடிக்கப்பட்டு தகுதிவாய்ந்த பயனாளிகளுக்கு முதலமைச்சர் பட்டா வழங்கும் பணியை தொடங்கி வைத்த பிறகு, நாமக்கல் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர், எம்பி மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் பட்டாக்களை வழங்குவார்கள். இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.
தொடர்ந்து, திருச்செங்கோடு நகராட்சி, வரகூராம்பட்டி, பட்டேல் நகர் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதை பார்வையிட்டு, சுத்திகரிப்பு நிலையத்தின் திறன் குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.
மேலும், திருச்செங்கோடு ஒன்றியம், அணிமூரில் செயல்பட்டு வரும் திடக்கழிவு மேலாண்மை வளாகத்தில் உயிரி உரம் தயாரிக்கும் பணிகளை பார்வையிட்டு, மக்கும் மற்றும் மக்காத குப்பைகள் தரம் பிரிப்பது குறித்தும், பிளாஸ்டிக் கழிவுகள் மறுசுழற்சி செய்யப்படுவது குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.
மேலும், தினசரி நகராட்சியில் சேகரமாகும் குப்பையின் அளவு குறித்தும் அலுவர்களிடம் கேட்டறிந்தார். ஆய்வின்போது, நகராட்சி கமிஷனர் அருள், பொறியாளர் சரவணன் மற்றும் அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.
The post 5 ஆண்டுகளுக்கு மேல் வசிக்கும் மக்களுக்கு வீட்டுமனை பட்டா appeared first on Dinakaran.