பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாளை முன்னிட்டு நடத்தப்பட்ட தமிழ் வார விழாவின் நிறைவு நிகழ்ச்சியில், 5 சிறந்த தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் நாட்டுடைமையாக்கப்பட்டு அதற்கான நூலுரிமைத் தொகை, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகளையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
தமிழ் மொழியின், தமிழ் இனத்தின் சிறப்பை உலகுக்கு எடுத்துரைத்த பாவேந்தர் பாரதிதாசனை சிறப்பிக்கும் வகையில், சட்டப்பேரவையில் கடந்த ஏப்.22ம் தேதி 110- விதியின்கீழ் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், ‘பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாளை முன்னிட்டு ஏப்ரல் 29 முதல் மே 5 வரை தமிழ் வார விழா கொண்டாடப்படும்’ எனவும், இவ்விழாவில் கவியரங்கங்கள் மற்றும் இலக்கிய கருத்தரங்குகள், பாரதிதாசன் இளம் படைப்பாளர் விருது, தமிழ் இலக்கியம் போற்றுவோம், பள்ளிகளில் தமிழ் நிகழ்ச்சிகள், தமிழ் இசை மற்றும் கலை நிகழ்ச்சிகள் கொண்டாடப்படும்’ என அறிவித்திருந்தார்.